
மெல்போர்ன்,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான ஷேன் வார்ன், கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் தாய்லாந்தில் உயிரிழந்தார். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்பட்டது. அவர் மரணத்திற்கு பலரும் தங்கள் இரங்கல்களைத் தெரிவித்து துக்கம் அனுசரித்தனர். இந்த நிலையில், அவரது மரணம் குறித்து தற்போது வெளியாகி வரும் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, ஷேன் வார்ன் உயிரிழந்த பிறகு, அவர் அருகில் இருந்த போதைப்பொருளை விசாரணை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக வழக்கு விசாரணையில் ஈடுபட்ட ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது;
ஷேன் வார்னே உயிரிழந்தபோது அவரது உடல் அருகே ஒரு போதைப்பொருள் இருந்தது. அது உடலுறவு மேற்கொள்வதற்காகப் பயன்படுத்தும் போதைப்பொருள். இதனை இதயம் பலவீனமாக உள்ளவர்கள் பயன்படுத்தக்கூடாது. மேலும் அவர் உடலுக்கு அருகில் சற்று வாந்தி எடுத்ததற்கான அடையாளமும், ரத்தமும் இருந்தது.
வார்னேவின் மரணத்திற்குப் பின்னால் இந்த போதைப்பொருள் கூட இருக்கலாம். எங்கள் மேலதிகாரி அந்தப் போதைப்பொருளை எடுக்குமாறு கூறிவிட்டார். கிரிக்கெட்டில் உச்சம் தொட்ட தங்களது வீரருக்கு இப்படி ஒரு மரணம் நிகழ்ந்ததாக வெளியாகும் செய்தி ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்திற்குப் பிடிக்கவில்லை. ஆகவே அவர்களும் இதற்குப் பின்னால் இருக்கலாம்."
இவ்வாறு அந்தக் காவல் அதிகாரி தெரிவித்தார்.