
'ஞானப்பழத்தைப் பெற எனக்கு தகுதி இல்லையா' என்ற கேள்வியுடன், பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு பழனிமலை (திருஆவினன்குடி) மீது தனித்து அமர்ந்தவர் முருகப் பெருமான். அதைத்தவிர அவர் வீற்றிருக்கும் திருப்பரங்குன்றம், திருவோகம் (சுவாமிமலை), திருச்செந்தூர், திருத்தணிகை, பழமுதிர்சோலை ஆகிய படைவீட்டு தலங்களும் சிறப்பு மிக்கதாக போற்றப்படுகிறது.
இந்த அறுபடை தலங்களையும் சஷ்டி திருநாளில் தரிசிக்கச் சென்ற ஒரு முருக பக்தர், தன்னை காத்திட வேண்டி முருகப்பெருமானை வேண்டிப் பாடியதே 'கந்தசஷ்டி கவசம்'. அந்த பக்தரின் பெயர், பால தேவராயசுவாமி. இவரது காலம் 19-ம் நூற்றாண்டு. கந்த சஷ்டி கவசத்தை பாலதேவராய சுவாமிகள் முதலில் பழனியில் ஆரம்பித்து, இதர ஐந்து படைவீடுகளுக்கும் சென்று பாடி முடித்தார். சுவசமாலை பாடுவோர் அப்பாடல்கள் யாருக்காக அல்லது யாரைக் குறித்து, யாரால் பாடப்பெற்றது என்பதை பாடல் வரிகளிலேயே உட்புகுத்தி எழுதுவது வழக்கம். அதை இப்பாடலைக் கேட்கும்போது அறியலாம்.
கந்தசஷ்டி கவச பாடல் அடங்கிய நூலை, பாலதேவராய சுவாமி அரங்கேற்றிய திருத்தலம், ஈரோடு அருகில் உள்ள சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஆகும். கந்தசஷ்டி கவசத்தில் வரும் `சிரகிரி வேலவன்' எனும் வரிகள், சென்னிமலை முருகப்பெருமானைக் குறிப்பதாகும்.
தல சிறப்பு
சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஆறுபடை வீடுகளுக்கும் முந்தைய கோவிலாகவும், நிகரான பெருமையை உடையதாகவும் கூறப்படுகிறது.
சிவபெருமானின் திருமணத்தைக் காண, தென்கோடி மக்கள் அனைவரும் வடகோடியில் குவிந்தனர். அப்போது வடதிசை தாழ்ந்து, தென்திசை உயர்ந்தது. இதை சமன் செய்ய, அகத்தியரை தென்கோடிக்கு செல்லுமாறு சிவன் பணித்தார். இதனால் சிவன்- பார்வதியின் திருமணக் கோலத்தை காணமுடியாமல் போய்விடுமோ என அகத்தியர் வருந்தினார். இதை உணர்ந்த சிவபெருமான், "என் திருமணக் கோலத்தை நீ விரும்பும் இடத்தில் காட்டியருள்வேன்" என்று கூறினார்.
இதையடுத்து தென்திசை நோக்கி வந்த அகத்தியரை, அசுரர்களின் தலைவனான இடும்பாசுரன் சந்தித்து, தன்னை சீடனாக ஏற்றுக் கொள்ளும்படி பணிந்தான். அகத்தியரும், இடும்பாசுரனை சீடனாக ஏற்றார். ஒரு நாள், தென்திசை நோக்கிய அவசர பயணத்தால், தன் சிவ பூஜைக்குரிய பொருட்களை அருகில் உள்ள மலையில் இருந்து எடுத்து வரும்படி இடும்பாசுரனை பணித்தார். வடதிசை சென்ற இடும்பாசுரனுக்கு, அம்மலையில், சிவபூஜைக்குரிய பொருட்கள் எங்குள்ளது எனத்தெரியவில்லை.
எனவே சிவகிரி சத்யகிரி என்னும் இரு மலைகளையும் பெயர்த்து, காவடியாக எடுத்துக் கொண்டு சென்னிமலைக்கு வந்தார். அப்படி இடும்பன் கொண்டு வந்த மலைகளில் ஒன்றுதான் பழனி. அந்த வகையில் பழனி மலைக்கும் முந்தையது சென்னிமலை என்கிறார்கள் ஆன்மிக பெரியோர்கள்.