
கோவை,
கோவையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இங்கிருந்து 7-வது மலையில் சுயம்புவாக தோன்றிய சிவனை தரிசிக்க வனத்துறை சார்பில் ஆண்டுதோறும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய 4 மாதங்களில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.
அதன்படி தற்போது வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க கோவை மட்டுமின்றி வெளிமாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவர்கள், 7 மலை ஏறி வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசித்து செல்கின்றனர். அங்கு வரும் பக்தர்களுக்கு கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் மீதம் ஆகும் உணவு ஆங்காங்கே கொட்டப்படுவதாக கூறப்படுகிறது.
இதனால் வனப்பகுதியை விட்டு வெளியே வரும் காட்டு யானைகள், கோவில் வளாகத்தில் உள்ள உணவு கூடத்தில் இருந்த பொருட்களை தின்றும், அங்குள்ள கடைகளை சேதப்படுத்தியும் அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அச்சப்படும் நிலை உள்ளது. கோவில் வளாகத்துக்கு வரும் காட்டு யானைகளை விரட்ட வனத்துறையினர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். யானைகள் வருவதை தடுக்க கோவிலை சுற்றி பெரிய அகழி தோண்டி தடுப்பு ஏற்படுத்தினர். ஆனாலும் காட்டு யானைகள் வருவது தொடர் கதையாக உள்ளது.
இதனையடுத்து, பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டர் கோவிலுக்கு வரும் பக்தர்களை பாதுகாக்கவும், காட்டு யானைகளை விரட்டவும் வசதியாக பொள்ளாச்சியை அடுத்த டாப்சிலிப்பில் இருந்து நரசிம்மன் என்ற கும்கி யானை கடந்த 2-ம் தேதி வரவழைக்கப்பட்டது. அந்த கும்கி யானை கோவில் வளாகத்தில் நிறுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், வெள்ளிங்கிரி மலைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்புக்காக ஏற்கனவே நரசிம்மன் என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக சின்னத்தம்பி என்ற கும்கி யானையும் வரவழைக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.