![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/07/38058998-sheik-hasina.webp)
டாக்கா,
வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. வன்முறை கட்டுக்கடங்காமல் போனதால், தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். ஷேக் ஹசீனாவை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வங்கதேச அரசு தொடர்ந்து இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்து வருகிறது. ஆனால், அந்தக் கோரிக்கைக்கு இந்தியா இதுவரை பதிலளிக்கவில்லை.
இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஷேக் ஹசீனா வீடியோ வாயிலாக தனது கட்சியினர் மத்தியில் உரையாற்றினார். அதில், 'தற்போதைய இடைக்கால அரசுக்கு எதிராக நாட்டு மக்கள் ஒன்றுதிரள வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார்.
ஹசீனாவின் உரை வெளியாகிக் கொண்டிருந்தபோதே டாக்காவில் உள்ள அவரது தந்தையும், வங்கதேசத்தின் தந்தையுமான ஷேக் முஜிபூா் ரகுமானின் இல்லத்தை போராட்டக்காரா்கள் சூறையாடினா். பல்வேறு இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, ஷேக் ஹசீனாவின் உரை தொடா்பாக இந்தியாவிடம் வங்கதேசம் கடும் கண்டனத்தைப் பதிவு செய்தது. இது தொடர்பாக வங்காளதேச வெளியுறவு அமைச்சகம் கூறியிருப்பதாவது:-
'இந்தியாவில் இருந்துகொண்டு வங்கதேசத்தில் கிளா்ச்சியைத் தூண்டும் வகையில் ஷேக் ஹசீனா தொடா்ந்து தவறான கருத்துகள் மற்றும் அறிக்கைகளை வெளியிடுகிறார். இதுகுறித்து டாக்காவில் உள்ள இந்திய துணைத் தூதா் பவன் பாதேவை நேரில் அழைத்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஷேக் ஹசீனாவின் நடவடிக்கைகள் வங்கதேசத்துக்கு விரோதமான செயலாகவும் இந்தியா-வங்கதேசம் இடையே ஆரோக்கியமான உறவை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு தடையாகவும் உள்ளன' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.