ஷிகான் ஹுசைனியின் மருத்துவ சிகிச்சைக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் நிதி உதவி

3 hours ago 2

சென்னை,

மதுரையை சேர்ந்தவர் ஷிகான் ஹுசைனி. இவர் கராத்தே மாஸ்டர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் கே பாலசந்தரின் புன்னகை மன்னன் படத்தில்தான் அறிமுகமானார். அது போல் பத்ரி படத்தில் விஜய்க்கு கராத்தே சொல்லிக் கொடுக்கும் மாஸ்டராகவும் ஹுசைனி நடித்திருக்கிறார்.

நடிகர்கள் மட்டுமின்றி வெகுஜன மக்களுக்கும் அவர் தனது கராத்தே பயிற்சி அளித்துள்ளார். மேலும் பலருக்கு வில் வித்தை பயிற்சியையும் அவர் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே சின்னத்திரையில் தோன்றியும் அவர் கராத்தே பயிற்சியளித்துள்ளார்.

இந்நிலையில் ரத்த புற்றுநோய் வந்திருப்பதாக அவர் கூறியிருப்பது பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதுகுறித்து ஷிகான் ஹுசைனி தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "எனக்கு ரத்த புற்றுநோய் வந்திருக்கிறது. இதற்கு மொத்தம் மூன்று காரணங்கள் சொல்கிறார்கள். அதாவது என்னுடைய ஜெனட்டிக் பிரச்னையால் வந்திருக்கலாம் அல்லது ஏதேனும் வைரசால் வந்திருக்கலாம் அல்லது ஏதேனும் ஒரு ஷாக்கினால் வந்திருக்கலாம் என்று சொன்னார்கள்.

நான் ஒருநாள் வாழ்வதற்கு 2 யூனிட் ரத்தம் மற்றும் பிளேட்லெட்ஸ் வேண்டும். நான் இன்னும் கொஞ்ச நாள்தான் உயிரோடு இருப்பேன். எனக்கு மன தைரியம் அதிகம். நான் கராத்தே சொல்லிக்கொடுக்கும் இடத்தை விற்கலாம் என்று முடிவு செய்துவிட்டேன். பவன் கல்யாண் இங்கு வந்துதான் கராத்தே கற்றுக்கொண்டு சென்றார். எனவே அவர் இந்த இடத்தை வாங்கிக்கொள்ள வேண்டும். அதேபோல் விஜய்க்கு ஒரு கோரிக்கை. அவர் தமிழ்நாடு முழுவதும் வீட்டுக்கு ஒரு வில்வித்தை வீரர், வீராங்கனையை உருவாக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

மேலும் அவர் ஒரு கடிதத்தை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அனுப்பியிருந்தார். அதில் அவர் கூறுகையில், "அன்புள்ள உதயநிதி ஸ்டாலின் எனது நிலைப்பாடு உங்களுக்கு தெரியும். மூன்று நாட்களுக்கு முன்பு எனது வில்வித்தை பணியின் வில் வீரர்களுக்காக ஒரு வேண்டுகோளை அனுப்பினேன். முழு மாநிலமும் இதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது நீங்கள் இன்னும் பதில் அளிக்கவில்லை. செய்தி உங்களை சென்றடையாததால் நீங்கள் என்னை சந்திக்கவில்லை என்று நான் இன்னும் உணர்கிறேன். இதை நான் உறுதியாக நம்பிக் கொண்டிருக்கிறேன். உங்கள் தந்தை மற்றும் மாமா மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. எனது உடல்நிலை மோசமடைந்து வருகிறது. ஆனால் எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. நீங்கள் என்னுடைய கோரிக்கையை செய்வீர்கள் என்று நம்புகிறேன். அது போல தமிழ்நாட்டில் உள்ள அன்பான நண்பர்களே என்னை பின்தொடர்பவர்களே நீங்கள் எனக்காக பிரார்த்தனை செய்வதற்கு பதிலாக எனது வேண்டுகோளை மாண்புமிகு தமிழ்நாடு விளையாட்டு அமைச்சருக்கு அனுப்பி உதவி செய்யுங்கள்" என்று ரசிகர்களிடமும் வேண்டுகோள் வைத்து இருந்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதியிலிருந்து ரூ. 5 லட்சத்திற்கான காசோலை ஷிகான் ஹுசைனியிடம் வழங்கப்பட்டது. ஹுசைனியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி வில்வித்தை பயிற்சியாளர் டாக்டர் ஷிஹான் ஹுசைனி அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை பெற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதியிலிருந்து ரூ. 5 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் நவீன வில்வித்தை வீரர்களை உருவாக்கி டாக்டர் ஷிஹான் ஹுசைனி அவர்கள் இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் வில்வித்தைக்கு பெறும் பங்களிப்பு செய்து வருகிறார். இவர் 400க்கு மேற்பட்ட வில்வித்தை வீரர்களுக்கு பயிற்சி அளித்தும், தமிழ்நாட்டில் நவீன வில்வித்தைக்கு முன்னோடியாக இருந்து ரீகர்வ் வில் (1979) மற்றும் காம்பவுண்ட் வில் (1980) ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார்.

நவீன வில்வித்தை பயிற்சி பாடத்திட்டத்தை வடிவமைத்து, மேம்பாட்டிற்கான தரங்களை வடிவமைத்தார். இந்தியாவின் முன்னணி வில்வித்தை வீரர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார். தற்போது ஹுசைனியின் நேரடி பயிற்சியின் கீழ் மொத்தம் 100 வில்வித்தை வீரர்கள் மற்றும் 300 பயிற்சியாளர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். ஹுசைனியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதியிலிருந்து ரூ.5 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article