ஒருமுறை வைணவ ஆச்சார்யர் நஞ்சீயரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.“வைஷ்ணவன் யார்? ஒருவருக்கு வைஷ்ணவத்துவம் உண்டு என்பதை எப்படித் தெரிந்துகொள்வது?”இந்த கேள்விக்கு நஞ்சீயர் சொன்ன விடை என்ன தெரியுமா? “நமக்கு நம் கஷ்டம் என்றால் உடனே வலி தெரியும். அடுத்தவர் கஷ்டம் என்றால், அது நமக்கும் அவருக்கும் உள்ள உறவை வைத்து கூடு தலாகவோ, குறைவாகவோ தெரியும். நமக்கு முகம் தெரியாத, பழக்கம் இல்லாத ஒருவருடைய துன்பத்தை யார் மூலமாகவோ, தெரிந்து கொள்ளும்போது “ஐயோ’’ என்று ஆதங்கப்பட்டால், நம் மனத்தில் வைஷ்ணவத்துவம் இருக்கிறது என்று பொருள்.”“பிறர் துன்பம் நெஞ்சிற் படுபவன் உண்மை வைஷ்ணவன்’’, என்று அருளுவார் நஞ்சீயர்.அனந்தாழ்வார் ராமனுஜருடைய சீடர். திருமலையிலே புஷ்ப கைங்கர்யம் செய்பவர். அவர் பட்டரிடம் இதே கேள்வியை கேட்டார். பட்டர் சொன்னார்;
* கொக்குபோல் இருப்பான்.
* கோழி போல் இருப்பான்.
* உப்பு போல் இருப்பான்.
* உம்மைப் போல் இருப்பான்.
நாலே வரி; நறுக்கான பதில். கொக்கு போல இருப்பான் என்றால், கொக்கு எப்படி நீர் நிலையுள்ள இடத்தைத் தேடி இருக்குமோ அப்படி, வைஷ்ணவன் சத்விஷயம் பேசப்படுகின்ற இடத்தில் சேர்ந்திருப்பான் என்பதாகும். சத்விஷயங்கள் பேசப்படுவதாலோ, ஆன்மிக மாநாடுகள் நடத்தப்படுவதாலோ. ஆன்மிகக் கூட்டங்களுக்கு செல்வதாலோ என்ன லாபம்? என்ன புண்ணியம்? என்ற கேள்வியும் வரும். ராமாயணமோ, மகாபாரதமோ – சொற்பொழிவு காலட்சேபங்கள் நடத்தப்படுகிற இடத்திலே ஆன்மிக அன்பர்கள் கூடுகிறார்கள். இப்படித்தான், ஒரு பெரியவர், சுற்று வட்டாரத்திலே, எங்கே ஆன்மிகப் பிரசங்கம் என்றாலும் தவறாமல் ஆஜராகிவிடுவார். அமைதியாக கேட்பார். வீடு திரும்பிடுவார். இதை கவனித்துக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு இளைஞன் அவரைப் பார்த்துக் கேட்டானாம்; “நேற்றுப் பிரசங்கம் போயிருந்தீர்கள் அல்லவா? பிரசங்கி என்ன பேசினார்?” இளைஞன் எதற்காகக் கேட்கிறான் என்பது பெரியவருக்குப் புரிந்தது.
“என்னமோ நல்ல விஷயங்களை சொன்னார். ஒன்றும் நினைவில் இல்லையே …’’“எதற்கும் பிரயோஜனமில்லாமலா ஒரு கூட்டத்துக்கு வேலை மெனக் கெட்டுப் போய் வருகிறீர்கள்?’’ என இளைஞன் கிண்டலாகக் கேட்டான். பெரியவர் சிரித்துக்கொண்டே கேட்டார்;“என்னப்பா செய்கிறது. வயசாகிறது அல்லவா. உன்னை மாதிரி வாலிபமாக இருந்தால், எல்லாம் மனசிலே நிக்கும்’’ பெரியவரும் ஏதோ “கிண்டல்’’தான் செய்கிறார் என்பது இளைஞனுக்கும் புரிந்தது. தான் கல்லூரியில் எத்தனை முறை `கோட்’ (Fail) அடித்தோம் என்பது அவருக்குத் தெரியாமல் இருக்குமா? பெரியவர் சொன்னார்;“அதை விடு அப்பா. எனக்கு ஒரு உதவி உன்னால் ஆக வேண்டுமே…’’ ஏதோ பேச்சு மாறுகிறதே என்று சந்தோஷப்பட்ட இளைஞன், “என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் உடனே செய்கிறேன்…’’ என்றான். பெரியவர் ஒரு பிரம்புக்கூடையைக் காட்டினார். உள்ளே அழுக்கு இருந்தது. இந்தக் கூடையை எடுத்துக் கொண்டு போய், கிணற்றிலே ஒரு கூடை தண்ணீர் கொண்டுவாயேன்…’’ என்றார். இளைஞனுக்கு முகம் சிவந்தது.
“என்ன பெரியவரே, கிண்டலா?பிரம்புக் கூடையில் தண்ணீர் ஒரு சொட்டாவது நிற்குமா…?’’ பெரியவர் சொன்னார்;“நிற்காதுதான். ஆனால், கூடை முந்தைக்கு சுத்தமாகுமே…’’ அழுக்கடைந்த கூடை, பலமுறை தண்ணீரால் முக்கியெடுக்கப்படும் போது. சுத்தமாவது போல், நல்ல விஷயங்களைக் கேட்பதால் மனம் தூய்மை யடையும். அப்படி நல்ல விஷயங்களை கொக்கு காத்திருந்து தேடுவது போல தேடவேண்டும்.
அடுத்து கோழிபோல இருப்பான். கோழி குப்பையைக் கிளறும். தானியங்களை மட்டும் பொறுக்கி எடுத்துத் தின்னும் எங்கே எப்படி சுற்றி வந்தாலும், மனது பரம்பொருளாகிய மந் நாராயணனையே பற்றும்.அந்த நிலைக்கு உதாரணம் தான் கோழி. மூன்றாவதாக உப்பு போல இருப்பான். இதற்கு எப்படி வேண்டுமானாலும் சுற்றி வளைத்து விளக்கம் தரலாம். உப்பு எவ்வளவு முக்கியம் என்று
எல்லோருக்கும் தெரியும்.
“உப்பிட்டவரை உள்ளளவும் நினை’’
“உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’’
இதெல்லாம் உப்பைப் பற்றி சொல்லப்படும் விஷயங்கள். இரண்டு மூன்று கோணங்களிலே மட்டும் பார்ப்போம்.
* உப்பு உணவுக்கு எந்த அளவு முக்கியமோ, அந்த அளவுக்கு வாழ்க்கைக்கு ஆன்மிகம் அவசியம். `உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’ என்பதைப் போல ஆன்மிகம் இல்லாத “லௌகீகம்’’ வீண்தான்.
* உப்பு குறைந்தால் உடம்புக்கு நல்லது. “பத்தியத்திற்கு” உப்பு சேர்க்கக் கூடாது. உலகியல் பற்றினை உப்புக்கு உதாரணமாகக் கொண்டால், உப்பு குறைத்தால் உடம்புக்கு எவ்வளவு நல்லதோ
அவ்வளவு நல்லது ஆன்ம முன்னேற்றத்திற்கு உண்டி உடை போன்ற `உலகியல் பற்று’ குறைவது.
* வயசு ஆக ஆக உப்பு குறைப்பதுதான் நல்லது. வயசு ஏற ஏற பற்று (உலகியல்) குறைவதுதான் நல்லது.
* உப்பு தன்னைக்கரைத்துக் கொள்ளும். சுவையில்தான் தெரியுமே தவிர, உப்பு தன்னை வெளிப்படுத்தாது.
பக்தி உள்ளவன் தன்னை முன்னிறுத்தக்கூடாது. 1000 ரூபாய் தர்மம் தந்துவிட்டு, அதனை 10,000 ரூபாய்க்கு விளம்பரப படுத்தக் கூடாது. ராமானுஜர், திருவேங்கடத்துக்கு எழுத்தருளியபோது திருமலை நம்பிகள் நேராக வந்து எம்பெருமானாரை வரவேற்றார். எம்பெருமானாரைவிட வயதில் பெரியவர் திருமலை நம்பிகள்.
“அடியேனை வரவேற்பதற்கு நீரே வரவேண்டுமா, வேறொருவரும் சிறியார்கள் இல்லையா என மனம் நெகிழ்ந்து கேட்டார் எம்பெருமானார். திருமலைநம்பிகள், “தேடித்தான் பார்த்தேன். என்னைவிட சிறிபவர்கள் யாரும் கிடைக்க வில்லை,’’ என்றார். இதுதான் நைச்சிய பாவம். அடக்கம். நான்தான் என்கிற இறுமாப்பு கூடாது. சாஸ்திரம் படித்து கல்வி கேள்விகள் நிறைந்த உள்ளத்தைக் காட்டிலும், பக்தரின் கள்ளமற்ற குழந்தை உள்ளமே கடவுளுக்கு உவப்பானது. எல்லாவற்றையும் சொன்னவர் கடைசியில் அனந்தாழ்வாரைப் பார்த்து “உம்மைப் போல் இருப்பான்” என்று சொல்கிறார். திருமலையிலே பெருமாளுக்கு தினம் தோறும் புஷ்ப கைங்கர்யம் பண்ணுகிற பக்தர் அவர். தனியாக நந்த வனம் வைத்து, வகை வகையான வண்ண மலர்களைப் பயிரிட்டு, மாலையாக்கி இறைவனுக்குச் சமர்ப்பிப்பதை நித்திய கைங்கரியமாகக் கொண்டிருப்பவர். ஒரு நாள் பூப்பறிக்கும் போது பாம்பு தீண்டிவிடுகிறது. எதைப்பற்றியும் கவலைப்படாமல், வழக்கம் போல் திருமலைக்குச் சென்று பெருமாளைச் சேவிக்கும் போது, மனது பொறாமல் பெருமாள் கேட்டாராம்;
“பாம்பு தீண்டியும் வைத்தியம்
பார்த்துக் கொள்ளாமல் இங்கு வந்தாயே!
உயிருக்கு ஆபத்தானால்…?’’ இவர்
சிரித்தார்;
“உயிருக்கு ஆபத்தானால் என்ன? நேரே வைகுண்டத்திலே வந்து உம்மை சேவித்திருப்பேன்..”
இந்த வைராக்கியமான பக்தி உள்ளம் வைஷ்ணவனுக்கு இருப்பதைக்
கருதித்தான் “உம்மைப் போல் இருப்பான்’’ என்றார்.
தேஜஸ்வி
The post வைராக்கியம் பழகிவிட்டால் கஷ்டங்கள் வராது appeared first on Dinakaran.