கொரோனாவுக்கு பிறகு புதியதாக எச்எம்பிவி வைரஸ் மக்களை அச்சுறுத்தி வருகிறது. ஆனால் இது சீனாவில் இருந்து வந்த வைரஸ் கிடையாது. 2001ம் ஆண்டில் நெதர்லாந்தில் இருந்து உலகம் முழுவதும் பரவியது. தட்ப வெட்ப மாற்றங்களின் போது சளி, இருமல், காய்ச்சலை ஏற்படுத்த கூடிய ஆபத்தில்லாத வைரஸ் என்று மருத்துவ நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர். எனவே முகக்கவசம் அணிந்து இதன் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தி இருக்கின்றனர்.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள பால்தாக்கரே கோரேவாடா விலங்குகள் பூங்காவில் எச்5என்1 என்ற வைரசால் ஏற்படும் ஏவியன் ப்ளு எனப்படும் பறவை காய்ச்சலுக்கு மூன்று புலிகள் மற்றும் ஒரு சிறுத்தை உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரசை மேலும் விலங்குகள் இடையே பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து சரணாலயத்துக்கும் ஒன்றிய விலங்குகள் நல அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
பறவை காய்ச்சலால் புலிகள் இறந்திருப்பது இந்தியாவில் இதுவே முதன்முறையாகும்.
சிறுத்தையால் நடக்கமுடியாத அளவுக்கு பாதிப்பு இருந்ததாகவும், ஒரு புலி உடல்நிலை மோசமடைந்து 24 மணிநேரத்தில் இறந்துவிட்டதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பறவை காய்சலை ஏற்படுத்தும் எச்5என்1 வைரஸால் புலிகள் மற்றும் சிறுத்தைகள் பாதிக்கப்பட்ட போது மற்ற விலங்குகளுடன் சேராமல் தனியாக வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட புலி, சிறுத்தையை கவனித்துக்கொண்ட ஊழியர்களையும் உயிரியல் பூங்காவின் இதர பகுதிகளுக்கு செல்ல அனுமதிக்கவில்லை.
ஏவியன் ப்ளு பறவை காய்ச்சல் எச்5என்1 வைரசால் ஏற்படுகிறது. இந்த வைரஸ் பொதுவாக வாத்துகள், கோழிகள் மற்றும் பிற இடங்களில் இருந்து இடம்பெறும் பறவைகளிடம் காணப்படுகிறது. இந்த வைரஸ் விலங்குகளுக்கும் பரவி காய்ச்சலை ஏற்படுத்தும். இது மனிதர்களுக்கும் பரவக்கூடும் என்று சுகாதாரத்துறை எச்சரிக்கிறது. எச்5என்1 வைரசுக்கு 16 வகை திரிபுகள் இருக்கின்றன. இதன் ஒரு திரிபே கடந்த சில வருடங்களாக உலகம் முழுவதும் உள்ள விலங்குகளிடம் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரஸ் மிகவும் வலிமையானது என்றும் பறவைகள் மூலம் அனைவருக்கும் வெகுதூரம் வரை பரவக்கூடியது என்று வைரஸ் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பறவை காய்ச்சல் விலங்குகளுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் பரவும் என்பது 1997ம் ஆண்டு முதன் முதலில் ஏற்படுத்திய பாதிப்பு உறுதி செய்தது. ஹாங்காங்கில் பறவை சந்தை ஒன்றில் இருந்து பரவிய இந்த வைரசால் 60 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். ஆனால் இந்த வைரஸ் காய்ச்சல் மனிதர்களை தாக்கும் போது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு தொற்றுவது கிடையாது.
வைரஸ் பாதித்தவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களுக்கு மட்டுமே எளிதில் பாதிப்பு ஏற்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. புதிய புதிய வைரஸ்கள் உருவாக நாம் தான் காரணமாகிறோம். சுற்றுப்புற தூய்மை, உணவு பழக்கவழக்கத்தில் கட்டுப்பாடு, காற்று, தண்ணீரை மாசுபடுத்தாமல் இருப்பது, கழிவு நீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது, கொசுக்கள் உற்பத்திக்கு இடம் கொடுக்காமல் தூய்மை பேணுவது போன்ற எளிய உதவிகளை இயற்கைக்கு செய்தால் இயற்கை என்றும் நமக்கு உறுதுணையாக இருந்து நோயற்ற ஆரோக்கியமான வாழ்வை பரிசாக அளிக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
The post வைரஸ் அபாயம் appeared first on Dinakaran.