மேட்டூர்: சேலம் அருகே மருமகளை கொடூரமாக மாமியார் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே தீராம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி இளவரசி (37). சிவக்குமார் தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த பணி செய்து வருகிறார். இவர்களது மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். இதனையொட்டி, உறவினர்களுக்கு பத்திரிகை வைப்பதற்காக சிவக்குமார் வெளியில் சென்றிருந்தார்.
அப்போது, சிவக்குமாரின் தாயார் விஜயகுமாரி, சகோதரர்கள் சரவணகுமார், மகேந்திரகுமார், மோகன்குமார் மற்றும் புவனேஸ்வரி, நிர்மலா ஆகியோர் இளவரசியின் வீட்டின் முன் இருந்த விளக்குகளை அடித்து நொறுக்கி உள்ளே புகுந்தனர். அங்கிருந்த இளவரசியின் முடியை பிடித்து தரதரவென இழுத்து அரிவாள், மட்டை, துடைப்பம் மற்றும் செருப்பு கொண்டு சரமாரியாக தாக்கினர். இவற்றை செல்போனில் பதிவு செய்து கொண்டிருந்த இளவரசியின் மகன் ஸ்ரீராம்சரத் மற்றும் மகள் ஆகியோரையும் தாக்கி செல்போன்களை பிடுங்கி சேதப்படுத்தினர்.
மருமகளை மகன்களுடன் சேர்ந்து கொடூரமாக தாக்கியும், ஆத்திரம் அடங்காத மாமியார் விஜயகுமாரி மீண்டும் இளவரசியை முடியை பிடித்து வீட்டின் வெளியே இழுத்து வந்து கடுமையாக தாக்கி உள்ளார். அக்கம் பக்கத்தினர் ஓடி வரவும், குழந்தைகள் அலறவும் விஜயகுமாரி தனது மகன்களுடன் அங்கிருந்து வெளியேறினார். இந்த தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் மேட்டூர் பகுதியில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், மேட்டூர் அரசு மருத்துவமனையில் இளவரசி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஏழை குடும்பத்தை சேர்ந்த இளவரசியை திருமணமான முதலே, மாமியார் விஜயகுமாரிக்கு பிடிக்காததால் அவர்களுக்குள் குடும்பத்தகராறு இருந்து வந்துள்ளது. இதனால், இளவரசி கணவர் சிவக்குமாருடன் தனியே வசித்து வருகிறார். மருமகளின் மீது கோபத்தில் இருந்த விஜயகுமாரி, மகன் சிவக்குமார் இல்லாதபோது வீடு புகுந்து கொடூரமாக தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில், மேச்சேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சேலம் அருகே மகன்களுடன் வீடு புகுந்து குழந்தைகள் எதிரே மருமகளை கொடூரமாக தாக்கிய மாமியார்: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு appeared first on Dinakaran.