திருச்சி: திருச்சி பஞ்சப்பூரில் 40 ஏக்கர் பரப்பளவில் ரூ.348.98 கோடியில் பிரமாண்டமாக, நவீன கட்டட அமைப்புடன் எழில்மிகு தோற்றத்தில் கண்ணைக்கவரும் ஒளி வெள்ளத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 30.12.2021ல் பஸ் முனைய பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். திருச்சி மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக இருந்த பஸ் முனையம் நாளை திறக்கப்படுகிறது.
இந்த பஸ் முனையத்துக்கு இரண்டு முகப்பு வாசல்கள் உள்ளன. இந்த வாசல் வழியாக உள்ளே சென்றால் சுற்றுச்சுவரில் இருந்து சிறிது தூரத்தில் மைய முகப்பு வாசலுக்கு எதிரில் கலைஞர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு வெளியூர் செல்லும் பஸ்கள் தரை தளத்திலிருந்தும், நகர பேருந்துகள் முதல் தளத்திலிருந்தும் இயக்கப்படும். 1257 நகர பஸ்கள், 1929 வெளியூர் பஸ்கள் இயக்கப்பட உள்ளது. பஸ்நிலைய முதல் தளத்தில் 56 நகர பேருந்து நிறுத்த முடியும். இந்த தளத்தில் 78 கடைகள், 2 உணவகங்கள், 2 சிற்றுண்டி கடைகள், பயணிகள் காத்திருப்பு அறைகள், பொருட்கள் வைப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது. குஷன் அமைப்புகளுடன் கூடிய கனமான, உயர் தரத்திலான ஸ்டீல் சேர்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் வராண்டாவில் பஸ் முனையத்தின் வசதிகள் மற்றும் பஸ்கள் நேரத்தை தெரிந்து கொள்ள பெரிய சைஸ் டிஜிட்டல் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது.
தரைதளத்திற்கு கீழ் அண்டர் கிரவுண்டில் 1,544 இருசக்கர வாகன நிறுத்துமிடம், தரைதளத்தில் 216 கார்கள், 391 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டுள்ளது. கீழ்தளத்திலிருந்து தரைதளம், முதல் தளத்திற்கு செல்ல வசதியாக 6 இடங்களில் படிக்கட்டுகள், 3 இடங்களில் நகரும் படிக்கட்டு, 3 இடங்களில் லிப்ட் வசதி உள்ளது. சாதாரண, குளிர்ந்த மற்றும் சுடு தண்ணீர் வரும் வகையில் 6 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட நவீன மினரல் டேங்க்குகள் பொருத்தப்பட்டுள்ளது. தீத்தடுப்பு கருவி, தீ எச்சரிக்கை கருவி, இலவச வைபை, ஏடிஎம் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 1.20 லட்சம் சதுர அடி பரப்பளவு உள்ள தரைதளம் முழுவதும் விமான நிலையம் போல், பால் சீலிங் செய்து 704 டன் ஏசி பொருத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே முதன்முதலாக திருச்சி பஸ் நிலையத்தில் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது.
முகப்பு முதல் கட்டிடத்தின் இறுதி வரை மேலிருந்து கீழாக தொங்கும் அமைப்பில் இரண்டு வரிசைகளிலும் பஸ், நேரம் உள்ளிட்ட தகவல்களை தெரிவிக்கும் டிஜிட்டல் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. வராண்டாவின் இரண்டு பக்கங்களிலும் மின் நிலையம் மற்றும் யூபிஎஸ் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தடையில்லா மின்சாரம் வழங்க தலா 500 வாட்ஸ் என மொத்தம் 2000 கிலோ வாட்ஸ் ஜெனரேட்டர் வைக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையம் முழுவதும் வழித்தடங்களை பொதுமக்கள் எளிதாக 50 எல்இடி திரைகள், 166 கண்காணிப்பு கேமராக்கள், ேகமரா கட்டுப்பாட்டு அறையும் தரைதளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
பஸ்நிலைய வளாகம் முழுவதும் 173 சிறுநீர் கழிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கு 42 கழிவறைகள், பெண்களுக்கு 59 கழிவறைகள், திருநங்கைகளுக்கு 2 கழிவறைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 4 கழிவறைகள், 4 பொது குளியல் அறை உள்ளது. பேருந்து பயணிகளை ஏற்றி இறக்க பேருந்து நிலையத்தின் முன்புறத்தில் 50 ஆட்டோக்கள், பின்புறத்தில் 50 ஆட்டோகள் நிறுத்த ஆட்டோ ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது. முதல் தளத்துக்கு முகப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சரிவு பாதையின் வழியாக பஸ்கள் மேலே வந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு, பின்புறம் அமைக்கப்பட்டுள்ள சரிவு பாதை வழியாக இறங்கி வெளியேறும். இதற்காக உள்ளே வருவதற்கு 2 சரிவு பாதைகளும், வெளியே செல்ல 2 சரிவு பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
பஸ்நிலையத்துக்குள் நுழைந்ததும் எதிரிலேயே ‘போட்டோ கேலரி’ ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இது அரசின் திட்டங்கள் குறித்து தெரிவிக்கும் எனக்கூறப்படுகிறது. வலது முகப்பில் விசாரணை அறை மற்றும் எ.புதூர் போலீஸ் நிலையத்தின் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 13 இடங்களில் உயர் மின் விளக்கு கோபுரங்களுடன் சேர்த்து, அதிக சக்தி வாய்ந்த விளக்குகள் பஸ் முனையம் முழுவதும் நிறுவப்பட்டுள்ளது. இதனால் இரவிலும் பகல் போன்று பிரகாசமாக இருக்கும்.
சுற்றுச்சுவரை கடந்து உள்ளே சென்றதும் முகப்பு பகுதியின் 2 பக்கங்களிலும் பசுமை பரப்பு அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் பசும் புல்வெளிகள், அழகுச்செடிகள், மரங்கள் மற்றும் பூச்செடிகள் அமைக்கப்பட்டு சர்வதேச விமான நிலையம் போல் பஸ் நிலையம் வண்ணமயமாக காட்சியளிக்கிறது.
The post வைபை, லிப்ட், எஸ்கலேட்டர், எல்இடி வசதிகளுடன் விமான நிலைய தரத்தில் பஞ்சப்பூர் பஸ் நிலையம்: தமிழகத்தில் முதன்முறையாக குளிர்சாதன வசதி appeared first on Dinakaran.