வாடிகன்: வாடிகனில் புதிய போப் தேர்வு செய்வதற்கான முதல் வாக்கெடுப்பில் கரும்புகை வெளியேறியதால் அது தோல்வியில் முடிந்தது தெரிய வந்துள்ளது. கத்தோலிக்க தலைவரான போப் பிரான்சிஸ் காலமானதை அடுத்து புதிய போப் தேர்வுக்கான நடைமுறைகளை கத்தோலிக்க திருச்சபை தொடங்கியுள்ளது. அதன்படி சிஸ்டைன் தேவாலயத்தில் 80 வயதுக்குட்பட்ட 133 கார்டினல்களும் தங்கவைக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு முதல் கட்ட வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெறுபவரே புதிய போப்பாக தேர்வு செய்யப்படும் நிலையில், கார்டினல்கள் ரகசிய முறையில் வாக்களித்தனர்.
இதில் யாருக்கும் பெரும்பான்மை அல்லது 89 வாக்குகள் கிடைக்காததால் தேவாலயத்தல் பொருத்தப்பட்ட புகை போக்கியில் கரும்புகை வெளியேற்றப்பட்டது. சிஸ்டைன் தேவாலயத்தின் முன்பு பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த நிலையில், அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும் புதிய போப் தேர்வு செய்வதை ஆவலுடன் எதிர்பார்ப்பதாக கூறினர். புகை போக்கியில் கரும்புகை வெளியேறியதை அடுத்து கார்டினல்கள் அனைவரும் உடனடியாக தனித்தனியாக அவர்கள் இருப்பிடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். புதிய போப் தேர்வு செய்வதற்கான அடுத்த கட்ட வாக்கெடுப்பு நாளை நடைபெற உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
The post வாடிகன் முதல் வாக்கெடுப்பில் புதிய போப் தேர்வாகவில்லை: சிஸ்டைன் தேவாலய புகை போக்கியில் கரும்புகை வெளியேற்றம் appeared first on Dinakaran.