நிலக்கோட்டை : திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் வைகையாற்று படுகையான விளாம்பட்டி, மட்டபாறை, எத்திலோடு, பிள்ளையார்நத்தம், ராமராஜபுரம், பள்ளபட்டி, சித்தா்கள்நத்தம், சிவஞானபுரம் ஆகிய கிராம பகுதிகளில் சம்பா நெல் பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் நெல் பயிரை காப்பீடு செய்ய நிலக்கோட்டை வட்டார வேளாண் உதவி இயக்குனர் உமா அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் நிலக்கோட்டை வட்டாரத்தில், நடப்பு 2024-25ம் ஆண்டு ராபி சிறப்பு பருவத்தில் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்த தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி 16.12.2024க்குள் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம். சம்பா நெல் பயிர்களை பயிர் காப்பீடு செய்ய வரும் டிசம்பர் 16ம் தேதி கடைசி நாளாகும். இத்திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் குத்தகைதாரர் உட்பட பயிர் கடன் பெறும் விவசாயிகளும் மற்றும் கடன் பெறாத விவசாயிகள் விருப்பத்தின் பேரில் பயிர் காப்பீடு செய்யலாம்.
இத்திட்டத்தில் பயிர் காப்பீடு செய்ய தேவைப்படும் ஆவணங்கள் சிட்டா, நடப்பு ஆண்டு பயிர் சாகுபடி அடங்கல், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களுடன், அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளைகள், கிராமிய வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்சங்கங்கள் மற்றும் பொது சேவை மையங்களை அனுகலாம் மற்றும் நிலக்கோட்டை வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகி விவரங்களை பெற்றுக்கொள்ளலாம்.
இத்திட்டத்தில் நெல் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.528/- பிரீமியம் செலுத்தி பயிர் காப்பீடு செய்யலாம். காப்பீட்டு பதிவின் போது கவனத்தில் கொள்ள வேண்டியவைகளாக விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யும் போது சாகுபடி செய்யப்பட்ட பரப்பை விட கூடுதலாக ஒரே சர்வே எண்ணிற்கு ஒன்றுக்கு மேற்பட்டோர் பதிவு செய்தலை தவிர்க்க வேண்டும். சாகுபடி செய்யப்படுகின்ற நில அளவு எண்ணை இரு வேறு இடங்களில் (பொது சேவை மையம் மற்றும் வங்கிகளில்) பயிர் காப்பீடு செய்வதை தவிர்க்க வேண்டும்,நடப்பு பசலி அடங்கல் (பசலி எண்:1434) மட்டும் பயன்படுத்த வேண்டும். அடங்கலில் வருவாய் கிராமத்தின் பெயர் மற்றும் பயிரின் பெயர் தெளிவாக இடம் பெற்று இருக்க வேண்டும்.
ஒரே சர்வே எண்ணிற்கு ஒன்றுக்கு மேற்பட்டோர் பதிவு செய்யும் போது மொத்த காப்பீடு பரப்பு, சர்வே எண் பரப்பிற்கு மிகாமல் இருக்க வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ, பொது சேவை மையங்களிலோ பதியக்கூடிய பயிர் காப்பீடுகளில் வருவாய் கிராமத்தின் பெயர், விவசாயின் பெயர் அல்லது குத்தகைதாரரின் பெயர், வங்கி கணக்கு எண் IFSC Code, தொடர்பு எண் இவை அனைத்தும் சமர்ப்பிப்பதற்கு முன்பாக சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.
பயிர் காப்பீடு செய்த பின் காப்பீடு இரசீதில் அனைத்து விவரங்களையும் தவறாமல் சரிபார்க்க வேண்டும். எனவே, விவசாயிகள் தங்கள் நெற்பயிரை காப்பீடு செய்ய கடைசி நாள் வரை காத்திராமல் டிச. 16ம் தேதிக்கு முன்னதாகவே காப்பீடு செய்து பயன்பெறுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
The post வைகையாற்று படுகையில் நெல் சாகுபடி விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அறிவுறுத்தல் appeared first on Dinakaran.