கும்பமேளா பலி எண்ணிக்கையை உத்தரபிரதேச அரசு மறைக்கிறது: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

3 hours ago 3

கொல்கத்தா: கும்பமேளா பலி எண்ணிக்கையை உத்தரபிரதேச அரசு மறைக்கிறது என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். மேற்குவங்கத்தில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த சூழலில், 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முழு அளவிலான மாநில பட்ஜெட்டை நிதியமைச்சர் (பொறுப்பு) சந்திரிமா பட்டாச்சார்யா தாக்கல் செய்து பேசினார். இந்த பட்ஜெட், சமூக நலம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளது. ரூ.3.89 லட்சம் கோடி அளவிலான இந்த பட்ஜெட்டில், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது.

மேலும், கல்வி, சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டதுடன், பல்வேறு துறைகளில் பெரிய அளவில் முதலீடு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் சமூக நல துறைக்கு, ரூ.38,762 கோடி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நலனுக்கான துறைக்கு ரூ.2,423.80 கோடி, பள்ளி மற்றும் கல்வி துறைக்கு ரூ.41,153.79 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுகாதார மற்றும் குடும்ப நலன் துறை, ரூ.21,355 கோடியை நிதி ஒதுக்கீடாக பெற்றது.

பஞ்சாயத்து மற்றும் கிராமப்புற வளர்ச்சி துறைக்கு ரூ.44,139 கோடி, வேளாண் துறைக்கு ரூ.10 ஆயிரம் கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு முதல்வர் மம்தா பானர்ஜி நிருபர்களிடம் கூறியதாவது: மேற்குவங்கத்தில் சட்டப்படி வழங்க வேண்டிய நிலுவை தொகையை ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை. பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஏராளமானோர் பலியானார்கள். ஆனால் இறப்பு எண்ணிக்கையை உத்தரபிரதேச பா.ஜ அரசு சரிவர வெளியிடவில்லை. பலியானோர் எண்ணிக்கையை மறைக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

 

The post கும்பமேளா பலி எண்ணிக்கையை உத்தரபிரதேச அரசு மறைக்கிறது: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Read Entire Article