
மதுரை,
மதுரை சித்திரை திருவிழாவில், கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் நடைபெறும். இதை முன்னிட்டு வைகை அணையில், போதுமான நீர் இருப்பு இருந்தால் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.
இந்தநிலையில் மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவில் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா, வருகிற 12-ந்தேதி அதிகாலை 5.45 முதல் 6.05 மணிக்குள் நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவுக்காக, வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 8-ந்தேதி மாலை 6 மணிக்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. பகல் நேரத்தில் வெயில் தாக்கம் அதிகமாக உள்ளதால், இரவில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
அதன்படி 8-ந்தேதி மாலை 6 மணி முதல் வருகிற 12-ந்தேதி மாலை 6 மணி வரை மொத்தமாக 215 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. தண்ணீர் வேகமாக செல்லும் வகையில் ஆரம்பத்தில் வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு, அதன்பிறகு படிப்படியாக குறைக்கப்படும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.