வைகாசி மாதத்தின் விசேஷ பெருமைகள்!

2 days ago 4

வைகாசி மாத முக்கிய கிரக மாறுதல்கள்:
வைகாசி 2 (16-5-2025) புதன் ரிஷப ராசிக்கு மாறுதல்.
வைகாசி 17 (31-5-2025) சுக்கிரன், மேஷ ராசிக்கு மாறுதல்.
வைகாசி 19 (2-6-2025) புதன், மிதுன ராசிக்கு மாறுதல்.
வைகாசி 25 (8-6-2025) செவ்வாய், சிம்ம ராசிக்கு மாறுதல்.

நவ கிரகங்களின் நாயகன் எனப் பூஜிக்கப்படும் சூரிய பகவான், தனது உச்ச ராசியான, மேஷத்தை விட்டு, சுக்கிரனின் வீடான ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் காலத்தையே வைகாசி மாதம் என நாம் கொண்டாடுகிறோம்.சுக்கிரனின் ராசியான ரிஷபம், சூரியனுக்குப் பகை வீடாகும்! அக்னீஸ்வரூபமான சூரிய பகவான், தனது பரிபூரண வீரியத்தைச் சற்றுக் குறைத்துக் கொள்ளும், “கத்திரி” வெயில் முடிவுக் காலமும், இந்த வைகாசி மாதத்தில்தான் நிகழ்கிறது.மேலும், பழனி ÿமுருகப் பெருமானை நமக்கு அளித்தருளிய போக சித்தர் அவதரித்த மாதமும் இந்த வைகாசியில்தான்! அதுமட்டுமா? கமல முனி, நந்தீஸ்வரர் ஆகிய சித்த மகா புருஷர்களும் இந்த வைகாசி மாதத்தில்தான் அவதரித்தனர்.வைணவ அவதாரப் புருஷர்களான நம்மாழ்வார், திருக்கோஷ்டியூர் நம்பிகள், பெரிய திருமலை நம்பிகள், ÿமத் அழகிய சிங்கர், தி்ருவாய்மொழிப்பிள்ளை ஆகியோர் அவதரித்து, இப்புண்ணிய பூமிக்கு தெய்வீகப் பெருமை சேர்த்த மாதமும் இந்த வைகாசிதான்!

வைகாசி 6 – (20-5-2025) : சதாசிவாஷ்டமி. இந்நன்னாளில் காலை வேளையில், சிவ பெருமானை வில்வ தளங்களைக் கொண்டு பூஜித்தல் வேண்டும். பிரதோஷகாலமாகிய மாலை நேரத்தில், கால பைரவரையும் தரிசிப்போர்க்கு அநாவசியமான மனக்கிலேசங்களும், கணவர் – மனைவியரிடையே கருத்து வேற்றுமை விலகி, அந்நியோன்யம் மேம்படும். அதனால், வாழ்வில் மகிழ்ச்சியும், மன நிறைவையும், காண்பீர்கள்.

வைகாசி 8 – (22-5-2025) : கங்கா தசரா – மகத்தான புண்ணிய நதியான, பாகீரதி கங்கையை இன்றுமுதல் பத்து நாட்களுக்கு, பூஜித்து வந்தால், கங்கா ஸ்நான பலன் கிடைக்கும். அனைத்து பாபங்களும் நீங்கும்.
மேலும் இன்று தத்தாத்ரேய ஜெயந்தி. மகத்தான பதிவிரதையும், அத்திரி மகரிஷியின் பத்தினியுமான, அனுசூயைக்காக, ÿமகாவிஷ்ணு, ÿசிவபெருமான், ÿபிரம்ம தேவர் ஆகிய மூவரின் அம்சங்களும் ஒன்றுசேர்ந்து, தத்தாத்ரேயராக தரிசனம் அளித்த புண்ணிய தினம்.

வைகாசி 9 – (23-5-2025) : வரூதினி ஏகாதசி விரதம்.
வைகாசி 10 – (24-5-2025) : பிரதோஷம். இந்நன்னாளில் (சனிக்கிழமை) உபவாசமிருந்து ரிஷபாரூபனாக தரிசித்தால், புத்திரப்ராப்தி உண்டாகும்.
வைகாசி 11 – (25-5-2025) : மாத சிவராத்திரி – இந்த நாளில் நிர்ஜலமாக (நீரைக் கூடப் பருகாமல் உபவாசமிருத்தல்) சிவபெருமானுக்கு பால், தயிர், நெய், தேன். கரும்புப் பால், தேங்காய்த் துருவல், மா, பலா, வாழை – பஞ்சாமிர்தம் போன்றவற்றால் அபிஷேகம் செய்வித்தால் அனைத்து கிரக தோஷங்களும் விலகும் அநேக நன்மைகளும் உங்களை வந்தடையும். மேலும் இன்றய தினம் சித்த மகா புருஷர் போகர் பெருமானின்அவதார நன்னாள்.
புலிப் பாணிச் சித்தரின் குருவும், காலாங்கியின் சீடரும், சித்த மகாபுருஷ போகர் பெருமானைப் பற்றி அகஸ்திய பெருமானார்,

கேளப்பா போகரவர் சிறுவன் பாலன்
கெடியான வளமையிலே அதிசயங்கள்
தாளப்பா தாய்ப்பாலை உண்ணும் போதும்
தகைமையுடன் ஆறுதிங்கள் நடக்கும்போதும்
வாளான ரம்பம்போல் வார்த்தை கூறும்
வளமான லோக அதிசயங்கள் கூறும்
மீளப்பா ஞானப்பால் தானே கேட்கும்
விட்டகுறை வாய்த்த தென்று கூறும் பாரே!

எனக்் கூறுகிறார். பால்குடிக்கும் பாலகனாய் இருந்தபோதே, ஆறேழு மாதங்களுடைய இளம் சிசுவாகவும், பச்சிளம் பாலகன் பேசும் மந்திரச் சொற்களைக் கேட்டு, வயதிற்கு மீறிய சொற்றொடர்களைப் பேசும் தன் குழந்தையைக் கண்ட பெற்ற தாய், குழம்பித்தான் நின்றாள்!சிப்பிக்குத் தெரியாது, தன்னிடமுள்ளது விலைமதிப்பற்ற நன்முத்து என்று! பிற்காலத்தில மனித சமுதாயத்திற்கே நவபாஷானச் சிலையை உருவாக்கி வான்புகழ்கொண்டார், போகர் சித்த மகாபுருஷர்!!போகர்-ன் ஜீவசமாதியானது பழனி ஆண்டவர் சந்நிதியில், உட்பிராகாரத்தின் தென்மேற்கு மூலையில் இன்றும் உள்ளது. போகர் பெருமானார் பூஜித்த ÿபுவனேஸ்வரிஅம்மனின் திருவுருவம் பழனி ஆண்டவர் சந்நிதியில் இன்றளவும் தரிசிக்கலாம். இன்றைய தினத்தில், உங்கள் பூஜையறையில் வழக்கமாக உள்ள தீபத்தைத் தவிர்த்து, மற்றொரு தீபம் ஏற்றி, போகர் பெருமானை மனத்தளவில் தியானித்தால், அஷ்டாங்க சித்தி அடையும் மார்க்கத்தை நோக்கி, நம்மைக் கைப்பிடித்து அழைத்துச் சென்று, நம் இடர்களைக் களைவார்.

வைகாசி 13 – (27-5-2025): புன்னாக கௌரி விரதம் – வைகாசி மாதம், வளர்பிறை, பிரதமைத் திதியன்று, மாக்கோலமிட்டு, அம்பாளை எழுந்தருளிச் செய்து, மாலை மணி 6.30-லிருந்து, இரவு 8.30க்குள்ளாக மல்லிகை, முல்லை வாசமிகு மலர்களைக் கொண்டு துதித்து, பூஜை முடிந்தபிறகு, சுமங்கலிகளுக்கு வெற்றிலை-பாக்கு தாம்பூலம் கொடுத்து – இயன்றவர்கள் அவர்களுக்கு போஜனம் செய்வித்தல் மூலமும் இவ்விரதத்தை அனுஷ்டிப்பவர்களுக்கு, சகல பாபங்களும் விலகும். தம்பதியருக்குள் அந்நியோன்யம் பெருகும். கடன் தொல்லை, எதிரிகள் பயம் நீங்கும். மேலும், நோய்-ெநாடியற்ற வாழ்வும் அளித்தருள்வாள், அன்னை அபிராமி.

வைகாசி 14 – (28-5-2025): சந்திர தரிசனம் செய்ய வேண்டிய நன்னாள். தேய்பிறை முடிந்து, வளர்பிறை ஆரம்பிக்கும் முதல் நாளாகிய இன்று, மேற்குக் கீழ்வானில் தோன்றும் சந்திரோதயத்தைத் தரிசனம் செய்வோருக்கு, இந்நாள் தொடங்கி, மாதம் முடிவுறும் வாக்கிலும் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். மேலும், இந்தச் சந்திரோதய தரிசனமானது ஒருவரது ஆயுட்காலத்தை நீட்டிக்கச் செய்து, ஆயிரம் பிறைகளைக் காணும் பேற்றினைப் பெறுவர்.

வைகாசி 15 – (29-5-2025): ரம்யா திருதீயை – கதலி கௌரி விரதம். இவ்விரதத்தைக் கைக் கொள்ளும் கன்னியருக்கு, மேனியில் ஒருவித மினுமினுப்புடன் (ஸ்வர்ணத்தைப் ேபான்ற ஒளிகாந்தத்துடன்) கூடிய தேகத்தைப் பெறுவர். திருமணம் தள்ளிப்போய்க்கொண்டேயுள்ள நங்கையருக்கு உடனடியாக திருமண பாக்கியம் தந்தருளும் இவ்விரதத்தைக் கடைப்பிடிக்கும் கன்னிமார்களுக்கு!

வைகாசி 16 – (30-5-2025): ÿவிநாயகப் பெருமானுக்கு உகந்த சதுர்த்தி நன்னாளில், ÿவிநாயகப் பெருமானுக்கு அறுகம்புல்லைக் கொண்டு அர்ச்சனை செய்வித்து, 18 மோதகங்கள் (கொழுக்கட்டைகள்) பழவகைகள் அமுது செய்வித்து, ஒரு பிரம்மச்சாரிக்கு போஜனமும், உங்களால் இயன்ற ரூ.10 அல்லது ரூ.101 தட்சிணையாகத் தந்து நமஸ்கரித்தால், சகல காரியங்களும் எவ்விதத் தடங்கலுமின்றி, காரிய சித்தி கைகூடும். முக்கியமாக, இன்றைய தினத்தில் சந்திரனை தரிசித்தல் கூடாது.

வைகாசி 17 – (31-5-2025): குேலாத்துங்க சோழனின் ஐயப்பாடாகிய, மலையினும் பெரியது எது? கடலினும் பெரியது எது? உலகினும் பெரியது எது? எனும் சந்தேகத்திற்கு, பதிலளித்து, அரசவையை அலங்கரித்த, ÿ சேக்கிழார் ஸ்வாமிகளின் அவதாரப் புண்ணிய தினம். அறுபத்து மூன்று நாயன்மார்களின் பக்தித் தொண்டைப் பறைசாற்றும் திருத் தொண்டர் புராணத்தைப் படிப்பதாலும், கேட்பதாலும் நவகிரக தோஷங்கள் அனைத்தும் விலகி, வாழ்வில் வசந்தத்தைக் காண்பீர்கள்.மேலும், இன்று வைகாசி மாதம், பூச நட்சத்திரத்தில் அவதரித்தவரும் போகரின் சிஷ்ய கோடிகளில் ஒருவரும், பதினெண் சித்தர்களுள் ஒருவருமாகிய கமலமுனி சித்தரின் ஜெயந்தி. சீன நாட்டிலேயே நெடுங்காலம் தங்கியிருந்தமையால், இவருடைய நூல்களை அரங்கேற்றம் செய்வதற்கு, ஒருசிலர் தடைக் கற்களை ஏற்படுத்தினர். சதுரகிரியில் நித்தியவாசம் புரிந்த உரோம மகரிஷியை அணுகி, தமது நூல்களை அரங்கேற்றம் செய்திட உதவி கோரினார். பல ரிஷிகள், சித்த மகாபுருஷர்களின் மத்தியில் நூல்களும் அரங்கேறின. பலருக்கு இதில் அபிப்ராயபேதம் உண்டாகி, அதுவே அவர்களின் கோபத்திற்குக் காரணமாயிற்று! இதனால் வருத்தமுற்ற கமலமுனி சதுரகிரியிலேயே தவமியற்றத் துவங்கினார். அஷ்டமா சித்துக்கள் அனைத்தையும் கைவரப் பெற்றார். மதுரையம்பதியின் ஜீவ சமாதியில் இன்றும் அருள்பாலித்தருள்கிறார்.
“கமலம தாயிரத் தெட்டையுங் கண்டபின்
கமல முனியென்றும் காலாங்கி என்றும்
விமல றுரைத்தார் மெர்ச்சித்த னென்று
நிமல னென் நந்தி நேர்கொண்ட வாறே”
இந்தப் பாடல் வரிகளை தினந்தோறும் ஒருமுறையேனும் சொல்லிவருவீர்களேயானால், அஷ்டமா சித்துக்களை அடையும் மார்க்கத்தை ஒரு குரு ஸ்தானத்திலிருந்து, உங்களுக்கு வழி காட்டி அருள்வார்.

வைகாசி 18 – (1-6-2025): சஷ்டி விரதம் – இவ்விரதத்தை அனுஷ்டிப்பவர்கள், முருகப் பெருமானார் ஐஸ்வர்யங்களையும், அநேக சிரேயஸையும் தேவாதி தேவர்களுடைய சேனாதிபத்யத்தையும் அடைந்தவண்ணம் நாமும் இவ்விரதத்தைக் கடைப்பிடித்து, நீண்ட ஆயுள், ஆரோக்கியத்துடன் சகல சம்பத்துக்களுடன் வையத்துள் வாழ்வாங்கு வாழ்வர். “சட்டியில் இருந்தால்தானே அகப்பையில்…!” என்ற வாக்கியமும், சஷ்டியில் உபவாச விரதமிருந்தால், அகப்பையாகிய கருப்பையில் மகப்பேறு உண்டாகும் என்ற கருத்தினாேலயே உருவாயிற்றென்றால் இவ்விரதத்தின் மேன்மையை என்னவென்று உரைப்பது?

வைகாசி 19 – (2-6-2025) : தூமாவதீ ஜெயந்தி.
“காளீ தாரா மஹாவித்யா ஷோடஸீ புவனேஸ்வரி
பைரவி சின்ன மஸ்தாச வித்யா தூமாவதீததா
மாதங்கீ ஸித்த வித்யாச கமலா பகளாமுகீ
ஏதாதஸ மஹாவித்யா ஸர்வதந்த்ரேஷு கோபிதா”

மேலே கூறியுள்ள சியாமா ரஹஸ்ய மகா மந்திரங்களில் சிலாகித்து, பகுத்துக் கூறியுள்ளதுபோல், ஆதி பராசக்தியின் தசாவித சௌந்தர்ய ரூப – லாவண்யத்தில் அருள்பாலித்திடும் இவ்வடிவழகானது, திருமாலின் பத்து அவதாரங்களின் முதன்மை அவதாரமாகிய மத்ஸ்ய (மீன்வடிவ)த்திற்குச் சமமானதாகவும், ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில், சாயா (நிழல்) கிரகங்களாகிய ராகு – கேதுவின் தோஷங்களைப் போக்குபவளும், திருமாலின் ஈடிணையற்ற பராக்கிரமத்திற்குச் சமமானதாகப் போற்றி புகழ்ந்து கூறப்பட்டுள்ளது. இன்றைய தினத்தில், மாலை நேரத்தில், பூஜையறையில் அரிசி மாக் கோலமிட்டு, தேவியின் திருவுருவப் படத்தை எழுந்தருளச் செய்து, மூன்று அகல் விளக்குகளில் நெய் தீபமேற்றி வைத்து, சக்திவாய்ந்த மந்திரப்ரயோகங்கள் நிரம்பிய, லலிதா ஸகஸ்ரநாமம், துர்கா ஸப்ஸதீ, சௌந்தர்ய லஹரி, அபிராமி அந்தாதி, பஞ்ச ஸுக்தம், தேவி பாகவதம் போன்றவற்றில் எவை உங்களுக்கு வசதியாகப்படுகிறதோ அவற்றைப் பாராயணம் செய்து (அல்லது சொல்லக் கேட்டு), சுமங்கலிப் பெண்களுக்கு, ரவிக்கைத் துண்டு – வசதியுள்ளோர் புடவையுடன்கூடிய வெற்றிலை, பாக்கு தாம்பூலமும் கொடுத்து வணங்கினால், முற்பிறப்பில் செய்த அத்துனை பாபங்களும் தீயினிற் தூசாகும்; சகல சௌபாக்கியங்களும் – நீங்காத செல்வமாய் உங்கள் இல்லத்தில் நிறைந்து, மன-நிறைவுடன்கூடிய, மனமகிழ்ச்சியும் உங்களை ஆட்கொள்ளும்.
இன்றைய தினத்தில், கீழே தந்துள்ள தூமாவதி காயத்ரி மகா மந்திரத்தை 108 முறை ஜெபித்தாலே போதும், நேர்மறை எதிர் எண்ணங்கள் விலகி ஓடும். நல்லெண்ணங்களைக் கொண்டவர்களாக நண்பர்களும், உற்றார் உறவினர்களும் உங்களுக்கு அமைந்து, எல்லா விதத்திலும் உறுதுணையாக இருப்பர்.

ஓம் தூமாவத்யை வித்மஹே ஸம்ஹாரின்யை தீமஹி
தன்னோ தூமா ப்ரசோதயாத்

வைகாசி 23 – (6-6-2025): தாயிற் சிறந்த கோவிலுமில்லை! கங்கையைவிடப் புண்ணிய தீர்த்தம் வேறில்லை! காசியைவிட உயர்ந்த ேக்ஷத்திரமில்லை. காயத்ரியை விட உயர்ந்த மந்திரமில்லை என்பது ஆன்றோர் வாக்கு. தசமியன்று எண்ணெய் ஸ்நானம் செய்துவிட்டு, போஜனம் செய்துவிட்டு, அன்று இரவிலிருந்து மறுதினம் ஏகாதசி முடியும் வரை விரதமிருந்து, துவாதசி திதியன்று வேதாத்யானம் செய்தவர்களுக்கு போஜனம் செய்வித்துவிட்டு, நாம் சாப்பிட வேண்டும். இவ்வாறு உபவாசமிருப்பவர்கள், இக – பர சுகங்களை அனுபவித்து, முக்தி என்னும் பெரும்பேறை அடைந்து, ÿவைகுண்ட பதவியை அடைவதாக அநேக புராணங்களிலும் மிக, மிக சிலாகித்துக் கூறப்பட்டுள்ளது. இவ்விரதத்தை அனைவரும் முடிந்தவரை கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டுமாய் பிரார்த்திக்கின்றோம்.

வைகாசி 25 (8-6-2025) ÿலட்சுமி நரசிம்மர் அவதரித்த, சுவாதி திரு நட்சத்திரம். இந்நன்னாளில்,
“உக்ரம் வீரம் மகா விஷ்ணும் ஜ்வலந்தம் சர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்” எனும் மகா மந்திரத்தை 108 முறை ஜபித்து, வெல்லம், சுக்கு, ஏலக்காய் சேர்த்த பானகம் நைவேத்தியம் செய்து திருக்கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினால் சகல ேக்ஷமங்களும் உங்கள் இல்லம் தேடி வந்தடையப்போவது திண்ணம். மேலும், முக்கியமாக இன்று பிரதோஷம். இன்றைய (ஞாயிற்றுக் கிழமை) தினத்தில், பிரதோஷகாலமாகிய மாலை 4.30 மணிக்கு மேல் சிவ பெருமானை ரிஷபாரூடராக தரிசனம் செய்தால், உடல் ஆரோக்கியத்துடன், நீண்ட ஆயுள் – தீர்க்க ஆயுள் பெறுவது திண்ணம் என்பதை அநேக புராணங்களில் பிரதோஷ கால விரத மகிமையை சிலாகித்துக் கூறப்பட்டுள்ளன.
வைகாசி 26 (9-6-2025) பக்தர்கள், தங்கள் இதயத்தில் வைத்துப் பூஜிக்கும் பேரழகனும், சர்வ உலகங்களுக்கும் தாய் – தந்தையரான ÿ பார்வதி – பரமேஸ்வரனின் செல்லப் பிள்ளையான முருகப் பெருமான், இமயத்திலுள்ள மாந்தாதா சிகரத்தில், திகழும் சரவணப் பொய்கையில் அவதரித்த புண்ணிய தினமும், இம்மாதத்தில்தான் பூஜிக்கப்படுகிறது.

குன்றுதோறும் எழுந்தருளி, பக்தர்களின் உள்ளத்தைக் குளிர்விக்கும் பேரழகன் – குமரனைப் பூஜிப்பது பல பிறவிகளிலும் நாம் அறிந்தோ – அறியாமலோ செய்துள்ள அனைத்து தவறுகளையும் போக்கி, வீடு பேறளிக்கும்.
சீனாவின் ஆக்கிரமிப்பிலுள்ள திபேத்தில் திகழ்கின்றன, “மானஸ ஸரோவரம்” எனும் தெய்வீகப் பொய்கையும், அதன் கரையில், கோடி சூரிய பிரகாசத்துடன் விளங்கும் திருக்கயிலாய மலையுமாகும். அதன் கரையில்தான், தெய்வீகச்சுடர் ஒளிவிட்டுப் பிரகாசிக்கிறது, மாந்தாதா சிகரம்! ÿ ராமபிரானின் மூதாதையரான மாந்தாதா என்னும் மாமன்னர் தவமிருந்து, முக்தியடைந்த புண்ணியத் தலமாகும்.அந்தச்சிகரத்தில்தான், ÿமுருகப் பெருமான் அவதரித்த சரவணப் பொய்கையும் உள்ளது! திருக்கயிலாய யாத்திரைப் பேறு கிடைக்கும் பாக்கியசாலிகளுக்கு, மாந்தாதா சிகர தரிசனமும் கிட்டும். சிவ பெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து ெதறித்த ஆறு தீப் பொறிகளே அந்தப் பொய்கையில் தெறித்து விழுந்து, தெய்வக் குழந்தைகளாக மாறின. கார்த்திகைப் பெண்கள் அழகான, அக்குழந்தைகளை வாரியெடுத்து, அணைத்துக் கொண்டபோது, அறுமுகமும் ஒருமுகமாகமாறி, கந்தப் பெருமான் காட்சி கொடுத்து அருளினான்.

இந்தத் தெய்வீக நிகழ்ச்சி, நிகழ்ந்ததும் வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில்தான்! அன்றைய தினம், உபவாசம், விரதமிருந்து முருகப் பெருமானைப் பூஜிப்பது, அனைத்து பாபங்களையும் போக்கி, அளவற்ற புண்ணிய பலன்களை அளிக்கும். மேலும், இன்று வைகாசி, விசாக நட்சத்திரத்தில் நந்தீசர் அவதரித்த புண்ணிய தினம். சித்த மகாபுருஷர், தமது நூலில்,
முத்தமுடன் நந்தீசர் பிறந்த நேர்மை
மூதுலகோர் தானறியச் சொல்வேன் அப்பா!
நித்தமது வைகாசி மாதமப்பா!
நீடான விசாகமது நாலாங்் காலாம்!!
பத்தியுடன் தான் பிறந்த நந்திதேவர்
பாரினிலே தேவஸ்தான குருவுமாச்சே!

என்று சிலாகித்துச் சொல்லுகிறார். இந்நன்னாளில் உங்கள் வீட்டுப் பூஜையறையில் மூன்று மண் அகல் விளக்குகளில் நெய் தீபம் எற்றி, மனத்தளவில் நந்தீசர்-ஐ துதித்தால், சகல நன்மைகளும் உங்கள் இல்லத்தில் நீக்கமற நிறைந்திருக்கும். சிவ பெருமானும், “நீயும் ஆனந்தமாய் இரு ; மற்றவர்களையும் ஆனந்தமாக வைத்திரு!” என்று உபதேசித்தருளியதைத் தொடர்ந்து, இன்றளவும் ஆனந்தத்தைத் தருபவராகவும், நந்தி புராணத்தில் தானும், நந்தியும் வேறல்ல என்றும் சிவபெருமான் திருவாக்கு மலர்ந்தருளியுள்ளார்.

வைகாசி 27 – (10-6-2025): வட சாவித்திரி விரதம். விவாகமான பெண்மணிகள், மகா உத்தமியான சாவித்திரியை நினைத்து, விரதமிருந்து பூஜிக்கும் புண்ணிய தினம். இவ்விரதத்தைக் கடைப்பிடிப்போரின் கணவர் தீர்க்கமான ஆயுளும் நோயற்ற வாழ்வும் கிடைக்கப் பெறுவர்.

“மகா பெரியவா” என உலகெங்கிலுமுள்ள கோடானகோடி பக்தர்கள் பூஜிக்கும் காஞ்சி காமகோடி பீடாதிபதியாக திகழ்ந்த மகா புருஷர் அவதரித்த புண்ணிய தினமும்,
இம்மாதம்.

27-ம் (10-6-2025): தேதியன்றுதான் கொண்டாடப்படுகிறது. மேலும், இன்று பௌர்ணமி. மனோகாரகரான சந்திரன், ஒவ்வொருவர் மனதையும் ஆட்கொள்கிறார். இந்நாளில் இயற்கையாகவே மனிதனின் மனம் அதிகப்படியான துடிப்புடன் செயல்படும். மனதளவில் பலகீனமானவர்கள் இந்நாளில் சற்றே விவேகமில்லாமலும், அதிக உத்வேகத்துடனும் நடந்துகொள்வர். சந்திரனின் அதிதேவதையாகிய நீர்நிலைகளும் கடல் போன்ற பகுதிகளில் அலைகளின் சீற்றம் அதிகமாக இருக்கும். பௌர்ணமி திதியன்று மனோகாரகரான சந்திரன் விசாக நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் காலத்தையே வைசாக பௌர்ணமி எனக் கொண்டாடப்படுகிறது. இந்நன்னாளில் முழு உபவாசமிருந்து, மாலையில் பூர்ண சந்திரனை தரிசித்தபின்னர் ÿசத்திய நாராயண பூஜை செய்து வணங்கினால், அவர்களுக்கு சகல சௌபாக்கியங்களையும் தந்தருளுவதாக ÿமந் நாராயணன் சத்தியப்ரமாணமும் – திருவாக்கு மலர்ந்தருளிய காரணத்தினாலேயே சத்தியநாராயண விரதம் என்றாயிற்று. இவ்விரதத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்கு சகலவித மனோரதங்களும், அபிலாஷைகளும் ஈடேறும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?லட்சுமி நரசிம்மர் அவதரித்த, வளர்பிறை சதுர்த்தசி – இன்றைய தினத்தில், மாக்கோலமிட்டு, ÿலட்சுமி நரசிம்மர் திருவுருவப் படத்தை எழுந்தருளச் செய்து, துளசி தளங்கொண்டு பூஜித்து, பானகம் நைவேத்தியம் செய்வித்தால், எதிரிகளற்ற, தொட்டதெல்லாம் துலங்கும், அனைத்துத் துறைகளிலும் வெற்றிவாகை சூடுவீர்கள்.

வைகாசி 29 – (12-6-2025): அறுபத்து மூன்று நாயன்மார்களில் முதன்மையானவரும், குழந்தைப் பருவத்தில், தாய் – தந்தையருடன், திருக்கோயிலுக்குச் சென்றபோது, தாய் – தந்தை இருவரும் குழந்தையை கரையில் அமரவைத்துவிட்டு பொய்கையில் நீராடிக் கொண்டிருக்கையில், தாய் – தந்தையரைக் காணாது, சிறு குழந்தை, “அம்மா… அம்மா!”- என்ற அழுகுரலைக் கேட்ட, அன்னை பார்வதி – பரமேஸ்வரன் அவ்விடத்தில் எழுந்தருளி, லோகமாதாவாகிய அன்னை, குழந்தைக்கு ஞானப் பாலூட்டினாள். குளத்தில் நீராடி முடித்து, தன் குழந்தையை கையில் எடுத்தபோது, குழந்தை வாயிலிருந்து பால் வடிவதைக் கண்ட தாய்-தந்தையர் தன் குழந்தையிடம் அதுபற்றி செல்லமாக வினவ, குழந்தையோ திருக்கோயிலை நோக்கிக் கையசைத்ததுடன், “தோடுடைய செவியான்…!” எனும் தேவாரத் திருவாசகத்தைப் பாடிப் பரவசப்படுத்திய ÿதிருஞான சம்பந்தப் பெருமானார் அவதரித்த புண்ணிய தினம்.
இதைவிட, இம்மாதத்தின் தெய்வீகப் பெருமைக்கு என்ன சான்று வேண்டும்…? இத்தகைய தெய்வீகப் பெருமைகளைக் கொண்டு, திகழும் இவ்வைகாசி மாதத்தின் ஒவ்வொரு ராசியினருக்கும், கிரக சஞ்சாரங்களின் அடிப்படையில் நிகழவிருக்கும் நிகழ்ச்சிகளை இனி ஆராய்வோம்!மிகப் புராதன, வானியல், விஞ்ஞான விதிகளின் அடிப்படையில் கணித்து, அந்தந்த ராசியினருக்கு ஏற்படவுள்ள பலா-பலன்களை இங்கே கூறியிருக்கிறோம். அவற்றால், எமது அன்பிற்குரிய “தினகரன்” வாசக சகோதர – சகோதரிகளும் பயன் பெறுவார்களேயாகில், மனநிறைவும், மகிழ்ச்சியும் பெறுவோம்!!எந்தெந்த ராசியினருக்கு பரிகாரம் அவசியமோ, அந்தந்த ராசியினருக்கான எளிய, சக்திவாய்ந்த இப்பரிகாரங்களனைத்தும், மிகப் பழைமையான ஜோதிட நூல்களிலிருந்து, சேகரித்தவைகளாகும். ஆதலால், நிச்சயமாகப் பலனளிக்கும்.

 

The post வைகாசி மாதத்தின் விசேஷ பெருமைகள்! appeared first on Dinakaran.

Read Entire Article