சென்னை: காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ விழாவில், பெருமாளுக்கு பாராயணம் பாடுவதில் வடகலை – தென்கலை பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. காஞ்சிபுரத்தில் அத்திவரதர் புகழ் வரதராஜபெருமாள் கோயிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ விழா ஆண்டுதோறும் நடப்பது வழக்கம். அதன்படி, இந்தாண்டு வைகாசி பிரம்மோற்சவ விழா கடந்த 11ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி, காலை, மாலை என இரு வேளையும் வரதராஜபெருமாள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பல்வேறு முக்கிய வீதிகளின் வழியாக வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பிரம்மோற்சவத்தின் 2ம் நாளான நேற்று காலை வரதராஜபெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் காண்பிக்கப்பட்டு, பட்டு வஸ்திரம் சாத்தப்பட்டு, வண்ண, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, வைர வைடூரிய திருவாபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர், கோயிலில் இருந்து புறப்பட்ட வரதராஜபெருமாள் முக்கிய வீதிகளில் வீதியுலா வந்து, கங்கைகொண்டான் மண்டபத்தில் மண்டகப்படி கண்டருளினார். ஏற்கனவே வடகலை – தென்கலை பிரிவினர் அவ்வப்போது மோதிக்கொள்ளும் நிகழ்வு நடைபெறும். இதன் காரணமாக திவ்ய பிரபந்தமோ, வேத பாராயணமோ செய்யக்கூடாது என கோயில் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இரு தரப்பினரும் மந்திர புஷ்பம் பாராயணம் செய்வதிலேயே மோதல் போக்கு நிலவியது.
இதனால், மந்திர புஷ்பம் இருதரப்பிலும் 6 பேர் மட்டுமே செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், இரு தரப்பினரும் கோயில் நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களை காற்றில் பறக்க விட்டு, இருதரப்பினரும் பாடியதால் வடகலை-தென்கலை பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இச்சம்பவதால் பெரும் பரபரப்பு நிலவியது. இதனால், சாமி தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். இதுகுறித்து, இந்து சமய அறநிலையத்துறை தலையிட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய ஏதுவாக உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்கிற கோரிக்கையை பக்தர்கள் முன் வைக்கின்றனர்.
The post வைகாசி பிரம்மோற்சவ விழாவில் பாராயணம் பாடுவதில் வடகலை-தென்கலை பிரிவினர் இடையே மீண்டும் மோதல்: காஞ்சிபுரத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.