போபால்: மத்திய பிரதேசத்தில் வேலைக்கே செல்லாமல் 12 ஆண்டாக ரூ. 28 லட்சம் ஊதியம் பெற்ற போலீஸ்காரர் தற்போது சிக்கியுள்ளார். தற்போது அவரிடம் 1.5 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், விதிஷாவைச் சேர்ந்த காவலர் ஒருவர் கடந்த 2011ம் ஆண்டில் காவல்துறைப் பணியில் சேர்ந்துள்ளார். பணி நியமனத்திற்குப் பிறகு, அவர் போபால் காவல் பிரிவிற்கு அனுப்பப்பட்டு, பின்னர் சாகர் பயிற்சி மையத்திற்குப் பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், அவர் பயிற்சிக்குச் செல்லாமல், தனது சொந்த ஊரான விதிஷாவுக்குத் திரும்பிவிட்டார். இதுகுறித்து எந்த அதிகாரிகளுக்கும் தெரிவிக்காமலும், விடுமுறைக்கு விண்ணப்பிக்காமலும், தனது பணி தொடர்பான கோப்பை தபால் மூலம் போபாலுக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆச்சரியகரமாக, அந்த கோப்பும் எந்தவித சரிபார்ப்பும் இன்றி அங்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதன் விளைவாக, பயிற்சி மையம் அல்லது போபால் காவல் பிரிவு என எங்கும் அவரது வருகை குறித்துக் கவனிக்கப்படாததால், அவர் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாகப் பணிக்கு வராமலேயே சுமார் 28 லட்சம் ரூபாய் சம்பளம் பெற்று வந்துள்ளார். இந்த மெகா மோசடி விவகாரம், 2023ல் கடந்த 2011ம் ஆண்டு பேட்ச் காவலர்களின் ஊதிய விகித ஆய்வு செய்யப்பட்டபோதுதான் வெளிச்சத்திற்கு வந்தது. அதிகாரிகள் அந்த காவலரின் பணிப் பதிவேடு, வருகைப் பதிவேடு என எதையும் கண்டுபிடிக்க முடியாததால் சந்தேகம் அடைந்தனர். பின்னர் சம்பந்தப்பட்ட நபரை விசாரணைக்கு அழைத்தனர். அப்போது அவர் தான் மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதனால் பணிக்கு வர முடியவில்லை என்றும் கூறி சில மருத்துவ ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளார். தற்போது அந்த காவலரை, போபால் காவல் பிரிவில் பணியமர்த்தப்பட்டார்.
அவரிடமிருந்து இதுவரை 1.5 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை அவரது எதிர்கால சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அலட்சியத்தில் தொடர்புடைய மற்ற அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
The post வேலைக்கே செல்லாமல் 12 ஆண்டாக ரூ. 28 லட்சம் ஊதியம் பெற்ற போலீஸ்காரர்: மத்திய பிரதேசத்தில் மெகா மோசடி appeared first on Dinakaran.