நன்றி குங்குமம் டாக்டர்
உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா
நமது தமிழர் மரபில் கீரைகளுக்கு எப்பொழுதும் தனி மதிப்பு உண்டு. ஏனெனில் வீட்டுத்தோட்டத்தில் தானாக வளர்கின்ற சில புல்வகை கீரைகளும் மனித உடலுக்கு நன்மை செய்யும் மருந்தாக நமது முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. அந்தவகையில் சாரணைக்கீரையும் ஒன்று. இதில் வெண் சாரணை, சிகப்பு தண்டு சாரணை என பல வகைகள் உண்டு. இது தரையோடு படரும் கொடி வகையைச் சார்ந்த கீரையாகும். பார்ப்பதற்கு மூக்கிரட்டை கீரையை போல இருக்கும். ஆனால் சாரணைக் கீரை என்பது வேறு இருப்பினும் இவையிரண்டும் ஒரே தாவரக் குடும்பத்தைச் சார்ந்த கீரைகளாகும்.
சாரணைக் கீரை இயற்கையாக வளரக்கூடிய புல் வகையைச் சார்ந்தது. நம் கிராமப்புறங்களில், விவசாய நிலங்கள், காலி இடங்கள், கால்வாய் ஓரங்கள், சாலையோரங்கள் எனப் பல்வேறு இடங்களில் பரவலாக காணப்படும் கீரையாகும். இதன் இலைகள் நல்ல பச்சைநிறத்தில் காணப்படும். வெப்பமான சூழ்நிலைகளையும் தாங்கி வளரக்கூடிய கீரை வகையாகும். இதனை நம்மில் பலரும் களைச்செடியாகவே கருதி தவிர்க்கப்பட்ட கீரையாகும். உண்மையில் இது ஒரு மருத்துவ குணம் நிறைந்த மூலிகை கீரை.
சாரணைக் கீரையின் ஊட்டச்சத்துக்கள்
சாரணைக் கீரை, நார்ச்சத்து மிகுந்த கீரையாகும். இதில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் ஏ மற்றும் சி போன்றவை நிறைந்துள்ளன. இதன் காரணமாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியினை மேம்படுத்த இக்கீரை உதவுகின்றது.
சாரணைக் கீரையில் காணப்படும் தாவரமூலக்கூறுகள்
அல்கலாய்டுகள் – கிளியோமின், ஜைனாண்டரின்
பிளேவோனாய்டுகள் – குவெர்செடின், ரூட்டின்
கார்டியாக் கிளைக்கோசைடுகள்
பீட்டா – சைட்டோஸ்டிரால்
பீனாலிக் அமிலங்கள் – கேஃபிக் அமிலம்
சாப்போனின்கள், டேனின்கள்.
சாரணைக் கீரையின் மருத்துவ குணங்கள்
*பாக்டீரியல் தொற்றுகளை அழித்து நம்மை பாதுகாக்க உதவுகிறது.
*சிறுவர்களுக்கு குடலில் புழுக்கள் தொல்லை ஏற்படுவதை குறைக்க உதவுகிறது.
*தோல் நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.
*ரத்தத்தை சுத்தப்படுத்த உதவுகிறது. ரத்தத்தில் நச்சுக்கள் கலப்பதே பெரும்பாலான நோய்களுககு நாம் ஆளாகிறோம். இதை தடுப்பதில் சாரணைக் கீரை நன்கு உதவுகிறது.
*உடல் சோர்வினை தடுக்கும் சக்தி சாரணைக் கீரைக்கு உண்டு.
*இதில் நிறைந்துள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் மூளையின் செயல்பாட்டினை மேம்படுத்த உதவுகிறது.
*இதயக்கோளாறு மற்றும் உள் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு ஒரு சிறந்த தீர்வாக சாரணைக் கீரை உள்ளது. மேலும் நீரிழிவு நோயினை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
*அதிக காய்ச்சல் காரணமாக ஏற்படும் உடல் வெப்பத்தை குறைக்க சாரணைக் கீரை உதவுகிறது.
*சாரணைக் கீரையை சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் பயன்படுத்தலாம். இது உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை அகற்றி சிறுநீரகத்தை பலப்படுத்தவும், பாதுகாக்கவும் உதவுகிறது. சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் பிரச்னைகளை சரி செய்யவும் உதவுகிறது.
*தொண்டையில் ஏற்படும் சதையைக் கரைக்க சாரணை கீரை உதவுகிறது. இதை அரைத்து சாறு எடுத்து பயன்படுத்தலாம்.
*சாரணை கீரை ஆஸ்துமாவைக் குணப்படுத்த உதவும் என்று கூறப்படுகிறது.
*நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் சாரணை கீரை உதவுகிறது.
*ஆண் மலட்டுத்தன்மையை நீக்கி கருவுறுதல் குறைபாடுகளை சரிசெய்ய சாரணை கீரை பயன்படும் என்று கூறப்படுகிறது.
சாரனைக் கீரையை பயன்படுத்தும் முறை
சாரணைக் கீரை கூட்டு: பருப்பு சேர்த்து கூட்டாக செய்து உண்ணலாம்
கீரை மசியல்: கீரையுடன் பூண்டு, சின்னவெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்கி அரைத்துச் சாப்பிடலாம்.
ரசம்: கீரையை நீருடன் சேர்த்து கொதிக்க வைத்து சிறிது சீரகம், மிளகு சேர்த்து குடிக்கலாம்.
கஷாயம்: கீரையை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம்.
சாரணை கீரையின் இலையை பறித்து இடித்து சாறு எடுத்து, பாலுடன் கலந்து குடிக்கலாம்.
இதன் சாற்றை நேரடியாகவோ அல்லது வேறு மருத்துவ பொருட்களுடன் சேர்த்தோ பயன்படுத்தலாம்.
சாரணைக் கீரையை பொடியாக நறுக்கி சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், சேர்த்து நல்லெண்ணெயில் வதக்கி அதனுடன் வேக வைத்த பருப்பு சேர்த்து பொரியலாகவும் சாப்பிடலாம். இந்தக் கீரையை நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நமது உடல் மற்றும் மனதின் ஆரோக்கியத்தைக் காக்கலாம்.
The post சாரணைக் கீரையின் மருத்துவ குணங்கள்! appeared first on Dinakaran.