வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும் பேருந்து சேவையில் எந்த பாதிப்பும் இருக்காது: போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல்

5 hours ago 2


சென்னை: வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும் நாளை பேருந்து சேவையில் எந்த பாதிப்பும் இருக்காது என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விலைவாசி உயர்வு உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒன்றிய அரசை கண்டித்து நாளை தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. தொமுச (LPF), ஐஎன்டியுசி (INTUC), சிஐடியு (CITU) உள்ளிட்ட 13 முக்கிய தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்கின்றன. இந்த வேலைநிறுத்தத்தில் அரசு அலுவலர்கள், பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பங்கேற்கவுள்ளனர். தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னை, கோயம்புத்தூர், மதுரை போன்ற முக்கிய நகரங்களில் பொது போக்குவரத்து முற்றிலும் முடங்கலாம். இதனால் மக்களின் அன்றாட பயணங்களில் பாதிப்பும் ஏற்படலாம்.

இந்த வேலைநிறுத்தத்திற்கு பொதுமக்கள் முன்கூட்டியே தயாராக வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கேட்டுக்கொண்டுள்ளன. இந்த நிலையில் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும் சென்னையில் நாளை பேருந்து சேவையில் எந்த பாதிப்பும் இருக்காது என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது: பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தமிழகத்தில் தொமுச , சிஐடியு , ஏஐடியுசி உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. முக்கிய தொழிற்சங்கங்களின் ஓட்டுநர் , நடத்துநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டாலும் சென்னையில் நாளை பேருந்து சேவை பாதிக்கப்படாது,

பேருந்துகள் முழு அளவில் இயங்குவதை உறுதி செய்ய இன்று பணியில் உள்ள ஓட்டுநர்கள் நாளை பணிக்கு வந்து , நாளை மறுநாள் பணி ஓய்வு எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒருநாள் பேருந்து ஓட்டினால் மறுநாள் பணி ஓய்வு , ஆனால் இன்று பேருந்து ஓட்டுவோர் நாளை கட்டாயம் பணிக்கு வர வேண்டும், நாளை மறுநாள் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாநகர் போக்குவரத்து கழக ஒப்பந்த அடிப்படையிலான ஓட்டுநர்கள் முழு அளவில் நாளை பணியில் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளோம். ஒப்பந்த அடிப்படை ஓட்டுநர்களே 1500 பேர் இருக்கின்றனர் , 2 ஆயிரம் ஓட்டுநர்கள் இருந்தாலே பேருந்துகளை முழு அளவில் இயக்கிவிட முடியும். சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் நாள்தோறும் 3200 பேருந்துகள் வரை இயக்கப்படுகின்றன. இதனால் பெரிய பாதிப்பு இருக்காது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

The post வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும் பேருந்து சேவையில் எந்த பாதிப்பும் இருக்காது: போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article