*கலெக்டர் ஆணை வழங்கினார்
வேலூர் : வேலூர் மாவட்டத்தில் 14 வழித்தடத்தில் மினிபஸ்கள் இயக்கப்பட உள்ளது. ஒரே வழித்தடத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து இருந்ததால் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு கலெக்டர் சுப்புலட்சுமி ஆணை வழங்கினார்.
பொது போக்குவரத்தானது பொதுமக்கள் பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கும், பயணம் மேற்கொள்வதற்கும், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஒவ்வொரு நாளும் மக்கள் பொதுபோக்குவரத்தை சார்ந்துள்ளனர். பேருந்துகள் நிகழ்காலத்திலும் எதிர்வரும் காலங்களிலும் தரைவழி மொத்த போக்குவரத்திற்கான முதன்மை போக்குவரத்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பேருந்துகள் பொது போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கோடிக்கணக்கான மக்களின் வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் மருத்துவம் சார்ந்த பயணங்களுக்காக குறைந்த கட்டணத்தில் பேருந்து சேவைகள் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகின்றன.
அரசுப் போக்குவரத்து கழகங்கள் மாநிலத்தின் பொது போக்குவரத்து இயக்கத்தின் முதுகெலும்பாக விளங்குகின்றன. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் வேலூர் மாவட்டத்தில் 184 புறநகர் பேருந்துகளும், 118 நகர பேருந்துகளும் பொதுமக்களின் பொதுபோக்குவரத்திற்காக இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பொதுமக்களின் போக்குவரத்து அவசியம் கருதி இதுவரை போக்குவரத்து வசதி இல்லாத கிராமங்களுக்கும் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் நோக்கில் மினி பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் தமிழக அரசு பொதுமக்களின் நலன் கருதி அதிக குடும்பங்களை கொண்ட கிராமங்கள், குக்கிராமங்கள், குடியிருப்புகள் உள்ள மக்களுக்கு சாலை பாதுகாப்பு சேவையை வழங்குவதற்காக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் மாவட்டத்தில் புதிய 36 வழித்தடங்கள் கண்டறியப்பட்டது. அந்த தடங்களில் மினி பஸ்கள் இயக்க விரும்புவோர் கடந்த 7ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் கோரப்பட்டது.
14 வழித்தடங்களில் மினிபஸ்களை இயக்க 49 விண்ணப்பங்கள் வரபெற்றன. ஒரே வழித்தடத்திற்கு ஒன்றுக்கு மேல் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டது. மினிபஸ் இயக்குவதற்காக 14 நபர்களுக்கு கலெக்டர் சுப்புலட்சுமி செயல்முறை ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்வில் வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தரராஜன் உடனிருந்தார்.
The post வேலூர் மாவட்டத்தில் 14 வழித்தடத்தில் மினிபஸ்கள் இயக்க நடவடிக்கை appeared first on Dinakaran.