வேலூர் கால்நடை பன்முக மருத்துவமனையில் 52 ஆயிரம் தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

7 hours ago 2

*முகாமை கலெக்டர் தொடங்கி வைத்தார்

வேலூர் : வேலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் வேலூர் மாநகராட்சி இணைந்து நடத்தும் நகரில் சுற்றித் திரியும் தெருநாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாமை கலெக்டர் சுப்புலட்சுமி நேற்று தொடங்கி வைத்தார்.

பொது இடங்களில் குறிப்பாக நகர பகுதிகளில் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களால் பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் அச்சுறுத்தலான சூழல் நிலவுவதை கருத்தில் கொண்டு இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்.

குறிப்பாக தெரு நாய்களை கட்டுப்படுத்த கால்நடை பராமரிப்புத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து கருத்தடை அறுவைச்சிகிச்சை செய்யும் திட்டம் மற்றும் வெறிநாய் கடிப்பதால் ஏற்படும் ரேபிஸ் எனப்படும் ‘வெறிநோய்’ தடுப்பூசி போடும் திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, வேலூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரகப்பகுதிகளில் சுற்றித்திரியும் தெரு நாய்களுக்கு வெறிநோய் (ரேபிஸ்) வராமல் தடுக்கும் வகையில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவிட்டார்.

இதையடுத்து தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் நேற்று வேலூர் தொரப்பாடி கால்நடை பன்முக மருத்துவமனை வளாகத்தில் தொடங்கியது. முகாமை கலெக்டர் சுப்புலட்சுமி தொடங்கி வைத்தார்.

வேலூர் மாநகரில் பிராணிகள் நல தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் அண்மையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் மூலம் வேலூர் மாநகர பகுதியில் 37 ஆயிரம் தெரு நாய்களும் மற்றும் ஊரக பகுதியில் 15 ஆயிரம் தெரு நாய்களும் இருப்பதாக தெரியவந்துள்ளது. இவ்வாறு மொத்தம் 52 ஆயிரம தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடுவதை இலக்காக வைத்து இம்முகாம் தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் உள்ள 52 ஆயிரம் தெரு நாய்களுக்கும் வேலூர் மாவட்டம், கால்நடை பராமரிப்புத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 49 கால்நடை மருந்தகங்கள் மூலம் உள்ளாட்சி அமைப்புகள் உதவியில் வெறிநோய் தடுப்பூசி போடப்படும்.

இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏ கார்த்திகேயன், மேயர் சுஜாதா, கமிஷனர் ஜானகி, 4வது மண்டலக்குழுத்தலைவர் வெங்கடேசன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் திருக்குமரன், உதவி இயக்குநர் அந்துவன், மருத்துவர் பாண்டியன், மருத்துவக்குழு உறுப்பினர்கள் தினேஷ்பாபு, தினேஷ் குமார், ரஞ்சித்குமார் உட்பட கலந்து கொண்டனர்.

The post வேலூர் கால்நடை பன்முக மருத்துவமனையில் 52 ஆயிரம் தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி appeared first on Dinakaran.

Read Entire Article