திருச்செந்தூர்: கோடை விடுமுறை முடிவுக்கு வருவதால் திருச்செந்தூர் முருகன் கோயிலில் கடந்த இரு தினங்களாக பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். முருகனின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூரில் வருடந்தோறும் கோடை கால விடுமுறை நாட்களில் பக்தர்கள் அதிகளவில் சுவாமி தரிசனம் செய்கின்றனர். அதேபோல இந்த ஆண்டும் பள்ளிகளில் பொதுத்தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை தொடங்கிய நாளில் இருந்தே வழிபாட்டுக்காக திருச்செந்தூருக்கு பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.நேற்று திருச்செந்தூர் முருகன் கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது.
அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித நீராடி இலவச பொது தரிசனம், ரூ.100 கட்டணப் பாதை மற்றும் மூத்த குடிமக்கள் வழியிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். கோடை விடுமுறை முடிவுக்கு வர இன்னும் 10 நாட்களே உள்ளதால் விடுமுறையை பல்வேறு குளிர் பிரதேசங்களிலும், பெரு நகரங்களிலும் சுற்றுலா சென்று ரசித்து வந்த மக்கள், தற்போது ஆன்மீக வழிபாட்டுக்காக திருச்செந்தூருக்கு அதிகளவில் வந்து குவிகின்றனர். இதனால் கடந்த இரு தினங்களாக திருச்செந்தூர் கோயில் வளாகமே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. திருச்செந்தூர் பகுதி விடுதிகள் அனைத்தும் 90% அறைகள் நிரம்பியுள்ளன. பக்தர்கள் கட்டண மற்றும் பொது தரிசன பாதையில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து திரும்புகின்றனர்.
The post கோடை விடுமுறை முடிவதால் குவிகின்றனர்; பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பிய திருச்செந்தூர் கோயில் வளாகம்: நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் appeared first on Dinakaran.