பால் மற்றும் இறைச்சி உற்பத்திக்கு புரதச்சத்து மிகவும் முக்கியமானதாகும். பொதுவாக கால்நடை வளர்ப்போர் புரதச்சத்து மேம்பாட்டுக்காக புண்ணாக்கு, பொட்டு, அடர்தீவனம் மற்றும் பருத்திக்கொட்டையைத் தங்களின் கால்நடைச் செல்வங்களுக்கு கொடுத்து வருகிறார்கள். இதுபோன்ற தீவனங்களை உற்பத்தி செய்ய அதிகளவில் செலவு செய்ய வேண்டி இருக்கும். இவற்றுக்குப் பதிலாக பயறு வகை தீவனப்பயிர்களை உற்பத்தி செய்து கால்நடைகளுக்கு தாராளமாக வழங்கலாம். பயறு வகை தீவனங்கள் கால்நடைகளுக்கு சிறந்த தீவனமாக பயன்படுவதுடன் பால் மற்றும் இறைச்சி உற்பத்தியை அதிகரிக்க சிறந்த வகையில் பங்காற்றுகின்றன. இவை அடர் தீவனத்திற்கு ஒப்பாகவும், அதற்கு மாற்றுத் தீவனமாகவும் கருதப்படுகிறது. பயறு வகை தீவனப் பயிர்களில் வேலி மசால், குதிரை மசால், முயல் மசால், தீவனத் தட்டைப்பயறு மற்றும் நரிப்பயறு போன்றவை குறிப்பிடத்தக்கன. இவற்றுள் வேலிமசால், குதிரை மசால், முயல் மசால், தட்டைப் பயறு போன்றவை மிகவும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தமிழகத்தில் வேலி மசால், தட்டைப்பயறு, குதிரை மசால் போன்றவை தோட்டக்கால் பயிராகவும், முயல் மசால், நரிப்பயறு போன்றவை மானாவாரி தீவனப் பயிர்களாகவும் விவசாயிகளால் பரவலாகப் பயிரிடப்பட்டு வருகின்றன. தீவனப் பயறு வகைப் பயிர்களைத் தேர்வு செய்து வளர்ப்பதன் மூலம் தீவன உற்பத்தியை எளிதாக பெருக்கலாம் எனக்கூறும் கள்ளக்குறிச்சி மாவட்டம் காளசமுத்திரத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலைய இணைப் பேராசிரியர் பெ.முருகன், நிலைய தலைவர் மா.விமலாராணி ஆகியோர் வேலி மசால் சாகுபடி குறித்தும் விளக்கம் அளித்தனர். வேலி மசால் கால்நடைகளுக்கு ஒரு பிடித்தமான தீவனம். அதிலும் ஆடுகள் இதை விரும்பி உட்கொள்ளும். இத்தகைய வேலி மசால் இறவையில் மிகவும் செழித்து வளரும். புரதச்சத்து மிகுதியான அளவில் வேலி மசாலில் நிறைந்திருக்கிறது. அதாவது 19.2 சதவீதம் புரதம் உள்ளது. இதன் வளர்ச்சி நெட்டுக்குத்தாகவும், அடர்த்தியாகவும் இருக்கும். அதிகமான விதை பிடிக்கும் தன்மை இதன் சிறப்பம்சம் ஆகும்.
வேலி மசாலின் முக்கிய ரகங்கள்: கோ – 1 மற்றும் கோ – 2.
பருவம்: இறவையில் ஆண்டு முழுவதும் பயிரிடலாம். ஜூன் – அக்டோபர் மாதங்களில் விதைக்கலாம்.
உழவு: இரும்புக் கலப்பை கொண்டு 2 அல்லது 3 முறை நிலத்தை நன்றாக உழவு செய்ய வேண்டும்.
தொழு உரமிடுதல்: தொழு உரம் அல்லது கம்போஸ்ட் உரத்தை எக்டருக்கு 12.5 டன் என்ற அளவில் இட வேண்டும்.
பார்கள் அமைத்தல்: 60 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும்.
உரமிடுதல்: மண் பரிசோதனையின்படி தகுந்த அளவில் உரமிட வேண்டும். மண் பரிசோதனை செய்யாவிடில் எக்டருக்கு 25:40:20 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்து இட வேண்டும். விதைப்புக்கு முன் அடியுரமாக முழு அளவு தழை, மணி மற்றும் சாம்பல் சத்தை இடவும்.
விதை அளவு: எக்டருக்கு 20 கிலோ என்ற அளவில் பார்களின் இருபுறமும் தொடர்ச்சியாக விதைக்கவும்.
விதை நேர்த்தி: 3 பாக்கெட்டுகள் (600 கிராம்) ரைசோபியம் உயிர் உரத்தைக் கொண்டு விதைநேர்த்தி செய்ய வேண்டும். விதைகள் நன்றாக முளைக்க கொதித்த நீரை 20 – 25 நிமிடங்கள் கீழே வைக்க வேண்டும். பின்பு அதில் வேலி மசால் விதைகளைப் போட வேண்டும்.
4 நிமிடங்கள் கழித்து நீரை வடித்து விட்டு விதையை நிழலில் உலர வைத்து விதைத்தால் சுமார் 80 சதவீதம் முளைப்புத்திறன் கிடைக்கும்.
நீர் மேலாண்மை: விதைத்தவுடன் பாசனம் செய்ய வேண்டும். மூன்றாவது நாளில் உயிர்நீர்ப் பாசனம் செய்ய வேண்டும். பின்பு வாரம் ஒருமுறை பாசனம் அளிப்பது சிறந்தது.
களை நிர்வாகம்: தேவைப்படும்போது களை எடுக்கவும்.
அறுவடை: விதைத்த 90 நாட்களுக்குப் பிறகு முதல் அறுவடை செய்ய வேண்டும். அடுத்தடுத்த அறுவடைகள் 45 நாட்கள் இடைவெளியிலும் செய்ய வேண்டும்.
பசுந்தீவன மகசூல்: எக்டருக்கு 100 டன்கள் வரை மகசூல் பெறலாம். இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வேலி மசால் தீவனப்பயிரைச் சாகுபடி செய்து கால்நடைகளுக்கு வழங்கி பலன்பெறலாம் என்கிறார்கள்.
வேலி மசால் தீவனத்தை இறவைப் பயிராக ஆண்டு முழுவதும் கால்நடை வளர்ப்பாளர்கள் வளர்க்கலாம். இது எல்லா நிலத்திலும் நன்றாக வளரும் இயல்பு கொண்டது என்பதால் துணிந்து பயிரிடலாம்.
தற்போது கால்நடை வளர்ப்பாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள். அவர்களுக்கு பசுந்தீவனமும் அதிகளவில் தேவைப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு வேலி மசாலைப் பயிரிட்டு விதை உற்பத்தி செய்யலாம். அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் விதைகளை மற்ற கால்நடை வளர்ப்பாளர்களிடம் விற்று வருமானம் பார்க்கலாம்.
The post வேலி மசால் சாகுபடிக்கு சில விவரக்குறிப்புகள்! appeared first on Dinakaran.