'வேற்றுமையை விரும்பும் கட்சிக்கு ஆதரவளிப்பது ஆர்.எஸ்.எஸ்.தான்' - மோகன் பகவத் பேச்சுக்கு காங்கிரஸ் பதிலடி

2 hours ago 2

புதுடெல்லி,

நாக்பூரில் நடைபெற்ற வருடாந்திர விஜயதசமி நிகழ்ச்சியில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், "நமது அண்டை நாடான வங்காளதேசத்தில் என்ன நடக்கிறது? அங்குள்ள இந்துக்களுக்கு உதவ இந்திய அரசாங்கம் முன்வர வேண்டும். அதுமட்டுமின்றி, உலகில் உள்ள அனைத்து இந்துக்களும் ஒன்றிணைய வேண்டும். பலவீனமாக இருப்பது ஆபத்தை வரவேற்பதற்கு சமம். நாம் எங்கிருந்தாலும் ஒற்றுமையாகவும், வலிமையாகவும் இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

இந்நிலையில், மோகன் பகவத்தின் பேச்சு குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களிடம் கூறுகையில், "நாட்டில் வேற்றுமையை விரும்பும் கட்சிக்கு ஆதரவளித்து வருவது ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான். அரசியலமைப்பை மாற்றுவது, இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வருவது மற்றும் இஸ்லாமியர்கள் குறித்த வேற்றுமையான கருத்துகள் ஆகியவற்றை பேசுவதன் மூலம் வேற்றுமை ஆரம்பமாகிறது" என்று தெரிவித்தார்.

அதேபோல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா செய்தியாளர்களிடம் பேசுகையில், "சிறுபான்மையினரின் நிலை குறித்தும், அவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் வங்காளதேசத்தைப் பார்த்து மோகன் பகவத் தெரிந்து கொண்டால் நல்லதுதான். உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

அதே கருத்தை இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர் கூறினால், அதை ஏன் ஆர்.எஸ்.எஸ். ஆபத்தாக நினைக்கிறது? நாடாளுமன்றத்தில் பாலஸ்தீனம் குறித்து ஓவைசி பேசினால் அவர்களால் ஏன் பொறுத்துக்கொள்ள முடியவில்லை? இந்த முரண்பாடுகளுக்கு மோகன் பகவத் பதில் சொல்ல வேண்டும்" என்று கூறினார். 

Read Entire Article