ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் பங்கேற்காதது ஏன்?- செங்கோட்டையன் விளக்கம்

3 hours ago 1

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அலுவலக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

எனினும், இந்த நிகழ்ச்சியின் அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் கலந்துகொள்ளவில்லை. கடந்த ஆண்டு நடைபெற்ற ஜெயலலிதாவின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற செங்கோட்டையன், இந்த முறை பங்கேற்காதது அதிமுக வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு இன்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கினார். இதைத் தொடர்ந்து கோபி செட்டிபாளையத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் நிகழ்ச்சியில் செங்கோட்டையன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

அப்போது, சென்னையில் இன்று நடைபெறும் ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சியில் ஏன் பங்கேற்கவில்லை? என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த செங்கோட்டையன், "நினைவு நாளாக இருந்திருந்தால் நான் சென்னை சென்று இருப்பேன். பிறந்த நாள் என்பதால் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறேன். இந்த நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியால் பொதுமக்கள் பயன்பெறுவார்கள். இதன் மூலம் 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க ஆட்சிக்கு வர உதவிகரமாக இருக்கும்." என்றார்.

 

Read Entire Article