திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் வேதகிரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்கக்கோரி, கோயில் சொத்துக்கள் மீட்பு குழுவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்கள் மற்றும் கட்டளை சொத்துக்களை தனிநபர்கள் அனுபவித்து வருவதாகவும், கருணானந்தா மடம் உள்ளிட்டவைகளை மீட்டெடுக்க கோரியும் ‘வேதகிரீஸ்வரர் கோயில் சொத்துக்கள் மீட்பு குழு’ சார்பில் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் மலையடிவார வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
இதில், பாஜ பொறுப்பாளர் தனசேகரன் தலைமை தாங்கினார். இந்து முன்னணி பொறுப்பாளர்கள் ஆர்.டி.மணி, மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது, தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் உள்ள வேதகிரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களையும் முறையான கணக்கீடு செய்து பாராபட்சமின்றி அவைகளை மீட்க வேண்டும் என்று கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இதில் பாஜக, இந்து முன்னணி மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் வழங்கினர்.
The post வேதகிரீஸ்வரர் கோயில் நிலங்களை மீட்கக்கோரி சொத்துக்கள் மீட்பு குழு ஆர்ப்பாட்டம்: திருக்கழுக்குன்றத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.