![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/26/35842853-chennai-07.webp)
புதுடெல்லி,
தமிழக சட்டமன்றத்துக்கு கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் தனது வேட்பு மனுவில் சொத்து விவரங்கள் உள்பட பல்வேறு முக்கிய தகவல்களை தவறாக தெரிவித்ததாக கூறி, அவர் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மிலானி என்பவர் சேலம் கோர்ட்டில் புகார் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதை விசாரித்த கோர்ட்டு, இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி, முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யும்படி, சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய எடப்பாடி பழனிச்சாமியின் மனுவை சென்னை ஐகோர்ட்டு கடந்த 22-ந்தேதி தள்ளுபடி செய்தது.
இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை கோரியும் எடப்பாடி பழனிசாமி சார்பில் வக்கீல் பாலாஜி சீனிவாசன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நாளை (திங்கட்கிழமை) விசாரணைக்கு வருகிறது.