![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/10/38595296-10.webp)
திருச்செந்தூர்,
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. காலை 6 மணிக்கு சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.
காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடைபெறும். பின்னர் சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்கு ரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி, தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவிலை சேர்கிறார்.
சுவாமி சண்முகர் கடலில் கண்டெடுத்த தினமான இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெறுகிறது. மாலையில் சுவாமி அலைவாயுகந்த பெருமான் வீதி உலா நடைபெறும்.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். பச்சை மற்றும் காவி நிற ஆடை அணிந்தும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுகின்றனர்.
பல்வேறு ஊர்களில் இருந்தும் அலங்கரிக்கப்பட்ட மினி லாரி, லோடு ஆட்டோ போன்ற வாகனங்களில் முருகப்பெருமானின் திருவுருவ படத்தை வைத்தும், அவரது திருப்புகழை பாடியவாறும் பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர். திருச்செந்தூரில் காணும் இடமெல்லாம் முருக பக்தர்களாகவே காட்சி அளிப்பதால் விழாக்கோலம் பூண்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள், வரிசையில் நிற்காமல் விரைவில் சாமி தரிசனம் செய்வதற்கு தனிப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக திருச்செந்தூர் புறநகர் பகுதிகளில் சாலையோரம், கோவில் ஊழியர்கள் அமர்ந்து பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் கைகளில் ஸ்டிக்கர் ஒட்டி விடுகின்றனர்.
அவ்வாறு கைகளில் ஸ்டிக்கர் ஒட்டி வரும் பாதயாத்திரை பக்தர்கள் கோவிலில் தனிப்பாதையில் சென்று விரைவில் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். தற்போது திருச்செந்தூர்- நெல்லை சாலையில் வேட்டைவெளி மண்டபம் அருகிலும், தூத்துக்குடி சாலையில் சண்முகபுரம் ரெயில்வே கேட் அருகிலும் கோவில் ஊழியர்கள் அமர்ந்து பாதயாத்திரை பக்தர்களின் கைகளில் ஸ்டிக்கர் ஒட்டுகின்றனர். இது பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.