டெல்லியில் தாமரை: ஈரோட்டில் உதயசூரியன்!

15 hours ago 2

தலைநகர் டெல்லியில் நடந்த சட்டசபை தேர்தல் முடிவு எப்படி இருக்கும்? என்று ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்த்துக்கொண்டு இருந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் உறுதியாக தெரிவித்தபடி 27 ஆண்டுகளுக்கு பிறகு பா.ஜனதா ஆட்சி கட்டிலில் அமர்கிறது. இந்த தேர்தலில் பா.ஜனதா, ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்தனியே களம் கண்டன. மேலும் இந்தியா கூட்டணி என்று ஒன்று இருக்கிறதா? என்று சந்தேகப்பட வைக்கும் வகையில் இந்த தேர்தலில் கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி, காங்கிரஸ் மட்டுமல்லாமல் மற்ற கட்சிகளுமே தனியாகத்தான் களம் கண்டன.

டெல்லி மக்கள் மிக வித்தியாசமானவர்கள். ஏனென்றால் கடந்த 2015, 2020-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சியை ஆட்சி கட்டிலில் அமர்த்தினர். அதேவேளையில் 2014, 2019, 2024-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சிக்கு வெற்றியை வாரிக்கொடுத்தனர். இந்த தேர்தல்களில் எல்லாம் காங்கிரஸ் கட்சி ஒரு சீட் கூட வெற்றி பெற முடியாதது போல இப்போதும் பூஜ்ஜியம் தான். கடை விரித்தோம், கொள்வாரில்லை என்ற நிலை காங்கிரசுக்கு ஏற்பட்டு விட்டது. இதுவரை நாடாளுமன்றத்துக்கு பா.ஜனதா, சட்டசபைக்கு ஆம் ஆத்மி என்ற மனநிலையில் இருந்த டெல்லி மக்களை இந்த தேர்தல் மாற்றிவிட்டது.

டெல்லியில் நடுத்தர மக்கள் 45 சதவீதம் பேர் இருக்கிறார்கள். இவர்களை பட்ஜெட்டில் ரூ.12 லட்சத்து 75 ஆயிரம் வரையில் வருமான வரி இல்லை என்ற அறிவிப்பு வெகுவாக கவர்ந்து விட்டது. அதுபோல அடித்தட்டு மக்களை ஈர்க்கும் வகையில் அறிவிக்கப்பட்ட பெண்களுக்கு மாதம் தோறும் ரூ.2,500 தருவோம் என்ற தேர்தல் வாக்குறுதி பெரிய பலனை கொடுத்தது. அதோடு ஊழல் வழக்கில் கெஜ்ரிவால் 5 மாதங்கள் சிறையில் இருந்ததும் அந்த கட்சி மக்களிடையே நம்பகத்தன்மையை இழந்து விட்டது. அரவிந்த் கெஜ்ரிவாலையே மக்கள் தோல்வியை தழுவ செய்து விட்டனர். 48 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது. ஆக டெல்லியில் தாமரை மலர்ந்துவிட்டது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலை பொறுத்தமட்டில் தி.மு.க.வை எதிர்த்து அ.தி.மு.க., பா.ஜனதா ஆகிய முக்கிய கட்சிகள் போட்டியிடவில்லை. நாம் தமிழர் கட்சி மட்டும் தி.மு.க.வை எதிர்த்து போட்டிக்கு வந்தது. போட்டியில் இல்லாத எதிர்க்கட்சிகளின் வாக்குகள் எல்லாம் முழுமையாக நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்தது எல்லாம் கானல் நீராகிவிட்டது. ஒட்டுமொத்த வாக்குகளையும் தி.மு.க. சுருட்டி எடுத்துக்கொண்டது. நாம் தமிழர் வேட்பாளர் டெபாசிட் கூட பெற முடியவில்லை. இவ்வளவுக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினோ, துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினோ அல்லது வழக்கமாக இடைத்தேர்தல் என்றால் முகாமிடும் அனைத்து அமைச்சர்களோ அங்கு செல்லவில்லை. அந்த மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் முத்துசாமி மட்டும் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். தி.மு.க. தான் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று எதிர்பார்த்தாலும் இவ்வளவு அமோக வெற்றியை மக்கள் வாரி வழங்கியிருப்பது நிச்சயமாக தி.மு.க.வுக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமையாகும். 2011-ல் இந்த தொகுதி உருவான பிறகு முதல் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற தி.மு.க. உதயசூரியனை ஒளிவிட செய்துவிட்டது. 

Read Entire Article