
சென்னை,
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருந்த 'வேட்டையன்' திரைப்படம் கடந்த 10-ந் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இயக்குனர் ஞானவேல் இயக்கிய இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். அமிதாப்பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்தும், என்கவுன்டரை எதிர்க்கும் வழக்கறிஞராக அமிதாப்பச்சனும் நடித்துள்ளனர். வேட்டையன் படம் தமிழ்நாடு மட்டுமில்லாமல் அண்டை மாநிலங்களில் வசூல் சாதனை படைத்து வருகிறது. வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் இப்படம் தற்போது வரை உலகளவில் ரூ.350 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து 'வேட்டையன்' படம் எப்போது ஓ.டி.டியில் வெளியாகும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அடுத்த மாதம் 7-ம் தேதி அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.