
ஜெய்ப்பூர்,
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரியன்ஷ் ஆர்யா- பிரம்சிம்ரன் சிங் களமிறங்கினர். ஆட்டத்தின் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து அதிரடியாக தொடங்கிய பிரியன்ஷ் ஆர்யா, நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மிச்செல் ஓவன் டக் அவுட் ஆகி ஏமாற்றினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன பிரம்சிம்ரன் சிங் 21 ரன்களில் நடையை கட்டினார்.
இந்த இக்கட்டான சூழலில் கை கோர்த்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்- நேஹல் வதேரா ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டது. ஸ்ரேயாஸ் ஒருபுறம் நிதானமாக விளையாட வதேரா அதிரடியாக விளையாடினார். சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் பிரிந்தது. ஸ்ரேயாஸ் ஐயர் 30 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் ஷசாங்க் சிங் களமிறங்கினார். இருவரும் ராஜஸ்தான் பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். வதேரா 37 பந்துகளில் 70 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஓமர்சாயும் வேகமாக மட்டையை சுழற்ற பஞ்சாப் 200 ரன்களை கடந்தது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் 5 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் குவித்துள்ளது. ஷசாங்க் சிங் 59 ரன்களுடனும், ஓமர்சாய் 21 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ராஜஸ்தான் தரப்பில் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 220 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ராஜஸ்தான் களமிறங்க உள்ளது.