
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 20ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கு முன்னதாக இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனான ரோகித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 7ம் தேதி அறிவித்தார்.
ரோகித்தை தொடர்ந்து விராட் கோலியும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து, எதிர்வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு புதிய கேப்டன், ரோகித் மற்றும் விராட் கோலிக்கு சரியான மாற்று வீரர்களை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு பி.சி.சி.ஐ வந்துள்ளது.
இதனிடையே இந்திய டெஸ்ட் அணிக்கு சுப்மன் கில் கேப்டனாகவும், ரிஷப் பண்ட் துணை கேப்டனாகவும் நியமிக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் சுப்மன் கில் இளம் வீரர் என்பதால் தற்போதைக்கு அவரை கேப்டனாக்க வேண்டாம் என்று ஒரு தரப்பினர் கூறிவருகின்றனர்.
அதேவேளை முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ராவை கேப்டனாக்க வேண்டும் என்று பல முன்னாள் வீரர்கள் கூறிவருகின்றனர். ஆனால் அவர் அடிக்கடி காயத்தை சந்திப்பதால் கேப்டன் பதவி வேண்டாம் என்று பலரும் கூறி வருகின்றனர். இது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக கே.எல். ராகுலை நியமிக்கலாம் என்று முன்னாள் வீரரான சஞ்சய் பங்கார் யோசனை தெரிவித்துள்ளார். கடந்த 2022-ம் தென் ஆப்பிரிக்காவில் விராட் இல்லாத சூழலில் கே.எல்.ராகுல் கேப்டனாக செயல்பட்டதை அவர் சூட்டிக்காட்டி பேசியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "ஹர்திக் பாண்ட்யா டி20 அணியின் புதிய கேப்டனாக செயல்படக் காத்திருந்தார். ஆனால் அவரிடம் பிட்னஸ் பிரச்சனை இருப்பதால் சூரியகுமார் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதன் அடிப்படையில் பார்த்தால் ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் கேப்டன்ஷிப் பதவியை தவற விடுவார். மறுபுறம் கே.எல். ராகுல் டெஸ்ட் போட்டிகளில் தம்முடைய தரத்தை நிரூபித்து டாப் ஆர்டரில் முக்கியமான ரன்கள் குவித்தவர்.
அவர் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடுபவர். வெளிநாட்டு மண்ணில் அனைத்து போட்டிகளிலும் விளையாடத் தகுதியானவர். அவர் தன்னுடைய பெரும்பாலான ரன்கள் மற்றும் சதங்களை வெளிநாட்டில் அடித்துள்ளார். எனவே எந்த சூழ்நிலையிலும் அவரது திறமை குறித்து கேள்வி இல்லை. மேலும் அவர் இளமையாக இருக்கிறார். ராகுல் தற்போது 31, 32 வயதுடையவர் என்று நினைக்கிறேன். எனவே அவரால் 2025-27 டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியை முழுமையாக விளையாட முடியும்.
நீங்கள் உண்மையிலேயே நீண்ட கால கேப்டனை நினைத்து கொண்டிருந்தால் சுப்மன் கில்லை தற்போது நியமிப்பது தவறாக அமையும். ஏனெனில் மிகவும் இளமையாக இருக்கும் அவருக்கு முன்னே நிறைய சுமையான கிரிக்கெட் இருக்கிறது. வெளிநாட்டு மண்ணில் தொடர்ச்சியாக அசத்துவது அவருக்கு சவாலாக இருக்கும். அவரை நீண்ட கால கேப்டனாக நீங்கள் நியமிக்கலாம் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் அதற்காக அவரிடம் உடனடியாக பொறுப்பைக் கொடுப்பது சரியானதாக இருக்காது. உங்களிடம் ராகுல் இருக்கிறார். ஒருமுறை தென் ஆப்பிரிக்காவில் விராட் கோலி கேப்டன்ஷிப் பொறுப்பை விட்டபோது ராகுல் இந்திய அணியை வழிநடத்தினார். அதில் நன்றாக செயல்பட்ட அவர் தொடக்க வீரராகவும் களமிறங்குவார். அதனால்தான், அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கு பிறகு நீங்கள் நீண்ட கால கேப்டன் குறித்து சிந்திக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்" என கூறினார்.