மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், வேடந்தாங்கல் ஊராட்சியில் சித்ரகூடம் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளில் இருநூறுக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக சித்ரகூட தெருவின் சாலை குண்டும் குழியுமாக மாறி, சேறும் சகதியுமாக சேதமான நிலையில் இருந்தது. இதனால் அப்பகுதியில் கடும் சுகாதார சீர்கேடும் நிலவி வந்தது. இச்சாலையை சீரமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கையை ஏற்று, சித்ரகூட தெரு சாலையை சீரமைக்க, அங்குள்ள நிலத்தை ஊராட்சி நிர்வாகம் கையகப்படுத்தியது. இதைத் தொடர்ந்து, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ரூ6 லட்சம் மதிப்பில் புதிதாக பேவர்பிளாக் சாலை அமைக்கப்பட்டது.
மேலும், அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, அங்கு 15வது நிதிக்குழு மானியத்தில் ரூ15 லட்சம் மதிப்பில் சிறிய தரைப்பாலம் மற்றும் சாலையின் இருபுறமும் புதிதாக மழைநீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டன. இப்பணிகளின் மூலம் சித்ரகூட தெரு சீரமைக்கப்பட்டதால், வேடந்தாங்கல் ஊராட்சியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தங்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, ஒன்றியக்குழு பெருந்தலைவர் கண்ணன், ஒன்றிய செயலாளர் தம்பு உள்பட பல்வேறு அரசு உயர் அதிகாரிகள், ஊராட்சி மன்றத் தலைவர் வேதாசலம், மன்ற உறுப்பினர்கள் உள்பட அனைவருக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
The post வேடந்தாங்கல் ஊராட்சியில் ரூ21 லட்சத்தில் சாலை, சிறு தரைப்பாலம், கால்வாய்: நன்றி தெரிவித்த மக்கள் appeared first on Dinakaran.