
ஜமைக்கா,
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 டெஸ்ட், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், 2 டெஸ்ட்களில் ஆஸ்திரேலியா வென்ற நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டெஸ்ட் ஜமைக்காவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 225 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஸ்டீவ் ஸ்மித் அதிகபட்சமாக 48 ரன்கள் சேர்த்தார். கிரீன் 46 ரன்கள் சேர்த்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அந்த அணியின் ஷமார் ஜோசப் 4 விக்கெட்டுகளையும் , ஜேடன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 143 ரன்களில் ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ஜான் கேம்பெல் 36 ரன் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் போலந்து 3 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 82 ரன் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 2ம் நாள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 99 ரன் எடுத்திருந்தது.
இதன் மூலம் நேற்றைய 2ம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 181 ரன்கள் முன்னிலை பெற்றது. இன்று 3ம் நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 121 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 204 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியினர், ஆஸ்திரேலிய வீரர்களின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். வெறும் 14.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த வெஸ்ட் இண்டீஸ் அணி 27 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
ஆஸ்திரேலியா தரப்பில் அபாரமாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை அள்ளினார். அவரே ஆட்டநாயகன் விருதையும் வென்றார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 176 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என ஆஸ்திரேலியா முழுமையாக கைப்பற்றியது.
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஸ்காட் போலந்து ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 26 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வெஸ்ட் இண்டீஸ் அணி இழந்திருந்த நிலையில் தனது 2 ஆவது ஓவரை வீசிய போலண்ட் முதல் 3 பந்துகளிலும் விக்கெட் வீழ்த்தினார். ஜஸ்டின் கிரீவ்ஸ், சமார் ஜோசப், ஓரிகன் ஆகியோரின் விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார். இதன்மூலம் இதன் மூலம் டெஸ்டில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த 10வது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை போலண்ட் பெற்றுள்ளார்.