
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவில் காவலாளியாக தனியார் ஒப்பந்த நிறுவனம் சார்பில் அஜித்குமார் (வயது 29) பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று இந்த கோவிலுக்கு காரில் நிகிதா என்ற பேராசிரியையும், அவருடைய தாயாரும் சென்றனர். காரில் இருந்த தனது சுமார் 10 பவுன் நகை மாயமானதாக கூறி திருப்புவனம் போலீசில் நிகிதா தெரிவித்த புகாரின்பேரில் போலீசார், அஜித்குமாரை அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் இவ்விவகாரத்தில் மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகசுந்தரம் மேற்பார்வையில் செயல்பட்ட தனிப்படை போலீசார் விசாரணை என்ற பெயரில், அஜித்குமாரை கொடூரமாக தாக்கியதில் அவர் உயிர் இழந்தார். இதையடுத்து கொலை வழக்கில் தனிப்படையை சேர்ந்த ராஜா, பிரபு, கண்ணன், ஆனந்த், சங்கர மணிகண்டன் ஆகிய 5 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
அஜித்குமார் கொலை குறித்து மதுரை மாவட்ட 4-வது கோர்ட்டு நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ், திருப்புவனத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி, தனது அறிக்கையை மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார். அஜித்குமார் வழக்கை சி.பி.ஐ.யிடம் தமிழக அரசு ஒப்படைத்த நிலையில், விசாரணை அதிகாரியாக சி.பி.ஐ. துணை சூப்பிரண்டு மோகித்குமார் நியமிக்கப்பட்டார்.
அவர் தலைமையில் டெல்லியில் இருந்து சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று முன்தினம் மதுரை வந்தனர். அஜித்குமார் மரண வழக்கு விசாரணையை நேற்று அவர்கள் தொடங்கினர். நேற்று காலையில் மதுரை சி.பி.ஐ. அலுவலகத்தில் இந்த வழக்கு குறித்த விவரங்களை கேட்டறிந்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் சேகரித்து இருந்த ஆவணங்கள் அனைத்தும் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
முதலில் பத்திரகாளி அம்மன் கோவில் பின்புறம் கோசாலை பகுதிக்கு சென்றனர். அங்கு அஜித்குமார் தாக்கப்பட்ட காட்சிகள்தான் வீடியோவாக வலைத்தளங்களில் பரவின. எனவே அந்த வீடியோ காட்சிகளில் இடம்பெற்றுள்ள இடங்களை அங்குலம் அங்குலமாக பார்வையிட்டனர். அப்போது சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சந்தீஷ் உள்ளிட்ட அதிகாரிகளும் அங்கு சென்றிருந்தனர். அவர்களிடம், சில தகவல்களை சி.பி.ஐ. அதிகாரிகள் கேட்டு தெரிந்துகொண்டனர்.
பின்னர் கோவிலுக்கான வாகன நிறுத்தும் இடம், அப்பகுதியில் உள்ள தங்கும் விடுதி, மதுரை-ராமேசுவரம் சாலையில் தவளையாபுரம் கண்மாய் போன்ற இடங்களையும் பார்வையிட்டனர். இந்த இடங்களுக்கு எல்லாம் அஜித்குமாரை, தனிப்படை போலீசார் அழைத்துச்சென்று தாக்கியதாக கூறப்படுகிறது. எனவே அந்த இடங்களை எல்லாம் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கள் செல்போன்களில் வீடியோவாக எடுத்துக்கொண்டனர்.
இந்த நிலையில், அஜித்குமார் கொலை வழக்கில் 2-வது நாளாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித்குமாரிடம் விசாரணை நடத்திய இடம், நகைத் திருட்டு புகார் அளித்த நிகிதா இருந்த அறை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்து வருகின்றனர்.