
முருகப்பெருமானுக்குரிய சஷ்டி திதியில் இருக்கும் விரதம் சஷ்டி விரதம் ஆகும். இதில் வளர்பிறை சஷ்டி, தேய்பிறை சஷ்டி என மாதத்திற்கு இருமுறை சஷ்டி திதி வரும். விரதம் இருந்து முருகனை வழிபடுவதற்கு சஷ்டி உகந்த நாளாக இருந்தாலும், தேய்பிறை சஷ்டி மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.
குழந்தை செல்வத்திற்காக காத்திருக்கும் பெண்கள் இந்த நாளில் விரதமிருந்து முருகப் பெருமானை மனமுருகி பிரார்த்தனை செய்திட மன மற்றும் உடல் குறைபாடுகள் நீங்கி குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. குழந்தை வரம் மட்டுமின்றி பல்வேறு செல்வங்களை அள்ளித்தர வல்லவர் முருகப்பெருமான். அவரை சரணடைவதற்கு இந்த விரதம் ஏற்றது.
குழந்தை வரம், நல்ல வேலை கிடைக்க வேண்டும், வியாபாரம் செழிக்க வேண்டும், நல்ல வரன் அமைய வேண்டும், ஆரோக்கியம் உள்ளிட்ட 16 செல்வங்களையும் வேண்டி சஷ்டி விரதம் இருக்கலாம். நம்பிக்கையோடு முருகப்பெருமானை எண்ணி விரதம் இருந்தால் அனைத்து வகை செல்வங்களையும் முருகப்பெருமான் அருளச் செய்வார்.
அவ்வகையில் நாளை, ஆனி மாத தேய்பிறை சஷ்டி தினம் ஆகும். இன்று நள்ளிரவு 12.48 மணி முதல் நாளை இரவு 8.43 வரை சஷ்டி திதி உள்ளது.
விரதம் இருப்பவர்கள் அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு வீடு முழுவதுமோ அல்லது வீட்டின் பூஜை அறையையோ அல்லது பூஜை செய்யும் இடத்தை மட்டுமோ சுத்தம் செய்ய வேண்டும். பின்பு அங்கு முருகன் படத்திற்கு முன்பு தீபமேற்றி, தீபாராதனை காட்டி, பால், பழம் நிவேதனம் வைக்க வேண்டும்.
காலையிலிருந்து உணவு எதுவும் அருந்தாமல் கந்த சஷ்டி கவசத்தையோ வேறு ஏதேனும் முருகனின் மந்திரங்களையோ உச்சரித்து வழிபட வேண்டும். இந்த ஜெபத்தை நாள் முழுவதுமோ அல்லது முடிந்த வரையிலோ மேற்கொள்ளவேண்டும். வேலை காரணமாக வெளியில் செல்பவர்கள், முருகப்பெருமானை மனதிற்குள் ஜெபித்தவாறு தங்கள் வேலையில் ஈடுபடலாம்.
முழு உபவாசம் இருக்க முடியாதவர்கள் காலை உணவை மட்டுமோ அல்லது பகல் உணவை மட்டுமோ தவிர்த்து விரதம் இருக்கலாம். அல்லது ஒரு வேளை பழம் மட்டும் சாப்பிட்டும், பகல் பொழுதில் உப்பு இல்லாமல் உணவு சாப்பிட்டும் விரதம் இருக்கலாம். மாலையில் பூஜை செய்து, சுவாமிக்கு படைத்த பாலை அருந்தி விரதத்தை நிறைவு செய்யலாம்.