சென்னை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 8-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை வீடியோ எடுத்து மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்செயல் நடந்தது. இதில் பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் புகாரின்பேரில், பொள்ளாச்சி டவுன் போலீசார் முதலில் வழக்குப்பதிந்து விசாரித்தனர். பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, அதன்பிறகு, சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டது.
இவ்வழக்கில், பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு (25), சபரிராஜன் (25), வசந்தகுமார் (27), சதீஷ் (28), மணிவண்ணன் (25) ஆகிய 5 பேர் 2019ல் கைது செய்யப்பட்டனர். ஹேரேன் பால் (29), பாபு என்கிற பைக் பாபு (34), அருளானந்தம் (34), அருண்குமார் ஆகிய 4 பேர் கடந்த 2021ல் கைதாகினர். இவர்கள் மீது பாலியல் வன்கொடுமை, அத்துமீறல், கூட்டுச்சதி, தடயங்கள் அழிப்பு உள்பட 13 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான 9 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் மீதான வழக்கு விசாரணை கோவை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என கோவை கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்தார். திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதிஷ், மணிவண்ணன், அருண்பால், பாபு, அளுளானந்தம், அருண்குமார் ஆகியோர் குற்றாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் குற்றவாளிகளைக் காக்கும் முயற்சியை முறியடித்ததே பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இன்றைக்கு நீதி கிடைக்க காரணம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது; ‘இன்று நினைத்தாலும் மனம் பதைபதைக்கும் பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை கிடைத்திருக்கிறது.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியின்போது நடந்த பெண்களுக்கு எதிரான இந்தக் கொடூரம் தமிழ்நாடு வரலாற்றில் ஒரு கருப்பு பக்கம்.
குற்றவாளிகளை காப்பாற்ற நடந்த முயற்சிகளை அன்று எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.கழகம், மக்களின் துணையோடு முறியடித்ததே பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இன்றைக்கு நீதி கிடைக்க காரணம்” என தெரிவித்துள்ளார்.
The post குற்றவாளிகளைக் காக்கும் முயற்சியை முறியடித்ததே பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இன்றைக்கு நீதி கிடைக்க காரணம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.