வாஷிங்டன்: வெள்ளை இன மக்கள் படுகொலை விவகாரத்தில் தென்னாப்பிரிக்க அதிபருடன் டிரம்ப் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசா அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது, வெள்ளை மாளிகையில் அந்நாட்டு அதிபர் டிரம்பை நேரில் சந்தித்து பேசினார். உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளில் இருந்து, அகதிகளாக அமெரிக்காவுக்கு வருகை தருவதற்கு டிரம்ப் நிர்வாகம் தடை விதித்த சூழலில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றது. ராமபோசாவுடனான சந்திப்பின்போது, அதிபர் டிரம்ப் நிருபர்கள் சந்திப்பையும் ஒன்றாக நடத்தினார்.
அப்போது, ஆப்பிரிக்காவில் வெள்ளை இன மக்கள் படுகொலை செய்யப்படுவது பற்றி ராமபோசாவிடம், டிரம்ப் காரசார விவாதத்தில் ஈடுபட்டார். அப்ேபாது டிரம்ப், வெள்ளை இன விவசாயிகள் படுகொலையை ஆப்பிரிக்க அரசு தடுக்க தவறி விட்டது என குற்றச்சாட்டாக நிருபர்களிடம் கூறினார். அவர்களுக்கு எதிரான நில அபகரிப்புகளும் அனுமதிக்கப்பட்டுள்ளன என குற்றச்சாட்டாக கூறினார். அப்போது, ராமபோசா மற்றும் அவரது அரசுக்கு எதிராக டிரம்ப் பேசியது பதற்றம் ஏற்படுத்தியது. இந்த கூட்டத்தில், சில வீடியோக்கள் மற்றும் செய்தி துணுக்குகளையும் வெளியிட்டார்.
வெள்ளை இன விவசாயிகள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்படுவதும் படுகொலை செய்யப்படுவதும் நடக்கிறது என ஆவணங்களை மூலம் வெளிப்படுத்தினார். இதுபோன்ற வன்முறை மற்றும் இனவெறி சட்டங்களால், வெள்ளை இன தென்னாப்பிரிக்கர்கள் வேறு நாடுகளுக்கு தப்பி செல்கின்றனர் என்றும் அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும் டிரம்பின் குற்றச்சாட்டுகளை ராமபோசா மறுத்துள்ளார். எனினும் தென்னாப்பிரிக்காவில் அனைத்து இன மக்களும் குற்ற செயல்களால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என்றார். மேலும் டிரம்ப் கூறியதற்கான சான்றுகளை நிரூபிக்க வேண்டும் என்று ராமபோசா அலுவலகம் தெரிவித்துள்ளது.
The post வெள்ளை இன மக்கள் படுகொலை விவகாரம்: தென்னாப்பிரிக்க அதிபருடன் டிரம்ப் காரசார வாக்குவாதம் appeared first on Dinakaran.