
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாமல்லபுரத்தை அடுத்த வடநெமிலியில் வருகிற 11-ம் தேதி சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கு தடை விதிக்க கோரி ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், சித்ரா பவுர்ணமி நாளில் பா.ம.க. மாநாடு நடத்துவதால் பக்தர்கள் பாதிக்கப்படுவார்கள்.
கடந்த 2013-ம் ஆண்டு நடந்த மரக்காணம் கலவரம், 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி நடத்தப்பட்ட போராட்டங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்ததை சுட்டிக்காட்டிய மனுதாரர், சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் இந்த மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் என்.மாலா மற்றும் ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், "மாநாடு நடக்கும் நாளில் கிழக்கு கடற்கரை சாலையை யாரும் பயன்படுத்த வேண்டாம்" என பா.ம.க. தலைவர் கூறியிருக்கிறார், என்றுகூறி அன்புமணி பேசிய வீடியோவை நீதிபதிகளிடம் காட்டினார்.
பா.ம.க. தரப்பில் ஆஜரான வக்கீல், "காவல்துறை விதித்துள்ள அத்தனை நிபந்தனைகளும் கண்டிப்புடன் பின்பற்றப்படும். எந்த அசம்பாவித சம்பவங்களுக்கும் இடம் கொடுக்காமல் அமைதியான முறையில் மாநாடு நடத்தப்படும்" என்று உறுதி அளித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், "மாநாட்டுக்கு அனுமதி அளித்து பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் கண்டிப்புடன் பின்பற்றப்படும் என்ற உத்தரவாத மனுவை வடக்கு மண்டல ஐ.ஜி.யிடம் வழங்க வேண்டும். மாநாட்டுக்கு வருபவர்கள் எந்த ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் எடுத்து வரக்கூடாது. மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் முறையாக காவல்துறையிடம் அனுமதி பெற்று வர வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.
மேலும், மாநாட்டின் பாதுகாப்புக்காக கூடுதல் போலீசாரை பணியமர்த்த வேண்டும். மாநாடும், சித்ரா பவுர்ணமி விழாவும் அமைதியாக நடப்பதை உறுதி செய்யும் வகையில் கண்காணிக்க வேண்டும் என வடக்கு மண்டல ஐ.ஜி.க்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். தேவைப்பட்டால் கூடுதல் நிபந்தனைகளை விதிக்கலாம் என அரசுக்கு அனுமதி அளித்தும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.