வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3 மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,000 நிவாரணம்..

4 months ago 13
ஃபெஞ்சல் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாயும், சேதமடைந்த குடிசைகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாயும், முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் கட்டித்தரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 33 சதவீதத்திற்கும் மேல் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஹெக்டேருக்கு 17 ஆயிரம் ரூபாயும், பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்களுக்கு ஹெக்டேருக்கு 22 ஆயிரத்து 500 ரூபாயும், மானாவரி பயிர்களுக்கு ஹெக்டேருக்கு 8 ஆயிரத்து 500 ரூபாயும் இழப்பீடு வழங்கப்பட உள்ளது. எருது, பசு இறப்பிற்கு தலா ரூ.37ஆயிரத்து 500 ரூபாயும், ஆடுகளுக்கு தலா 4 ஆயிரம் ரூபாயும், கோழிகளுக்கு தலா 100 ரூபாயும் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும். குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்டவற்றை இழந்தவர்களுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் உடனடியாக அவை வழங்கப்படும் எனவும், பாடப்புத்தகங்களை இழந்த மாணவ, மாணவிகளுக்கு புதிதாக பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஆட்சியர்கள் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read Entire Article