வெளியுறவு சிக்கல்

4 months ago 20

விருப்பத்திற்குரிய நட்பு நாடு’ என்ற பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கியுள்ளது சுவிட்சர்லாந்து. இதனால் அந்த நாட்டில் செயல்படும் இந்திய நிறுவனங்கள், கூடுதல் வரி செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தை சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான நெஸ்லே நிறுவனத்திற்கு எதிராக, இந்தியாவின் உச்சநீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், சுவிட்சர்லாந்து இந்தியாவை தனது விருப்பத்திற்குரிய நட்பு நாடு பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது என்பது தகவல்.

இந்த நடவடிக்கை 2025ம் ஆண்டு ஜனவரி 1ம்தேதி முதல் அமலுக்கு வரும் என்று சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது. இதன்மூலம் இரு நாடுகள் இடையே இருந்த வரி தொடர்பான ஒப்பந்தங்களும் ரத்தாகி விடும். இதனால் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் செயல்படும் இந்திய நிறுவனங்களும், தாங்கள் ஈட்டும் வருவாய்க்கு கூடுதல் வரி செலுத்த வேண்டியிருக்கும். குறிப்பாக சுவிட்சர்லாந்தில் இந்திய நிறுவனங்கள் முதலீடுகள் மூலம் ஈட்டும் ஈவுத்தொகைக்கும் 10 சதவீதம் வரிசெலுத்த வேண்டியது வரும் என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.

சுவிட்சர்லாந்து மட்டுமல்ல, தொடர்ச்சியான நிகழ்வுகளை ஒப்பிடும் போது, பெரும்பாலான நட்பு நாடுகளின் பட்டியலில் இருந்து விலகியே நிற்கிறது இந்தியா என்கின்றனர் சர்வதேச அரசியல் நோக்கர்கள். இந்தியாவின் பிரதமராக பதவியேற்றதும், மோடி 2014ம் ஆண்டு நேபாளுக்கும், 2015ம் ஆண்டு இலங்கை, வங்கதேசத்திற்கும் சென்ற போது, அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 2016ம் ஆண்டு மாலத்தீவுக்கு பிரதமர் மோடி சென்ற போது, பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்தானது.

ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக இந்த நிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது இந்தியாவை ஆளும் ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் அனைத்துமே, வாக்கு வங்கியை மையமாக வைத்து தான் நகர்கிறது. தேர்தல் வெற்றியை தாண்டி, வேறு எதையுமே இந்த அரசு முதன்மைப்படுத்துவதில்லை. இதனால் தான் வங்கதேசம், ஈரான் போன்ற நட்பு நாடுகளின் வெளியுறவு கூட மோசமடைந்து வருகிறது. நேபாளம், வங்கதேசம், பூடான், இலங்கை, மாலத்தீவு என்று எந்த நாடுகளுடனும், இந்தியாவிற்கு தற்போது சுமுகமான உறவு இல்லை. ஏற்கனவே இருந்த நிலை கூட மோசமடைந்து தான் வருகிறது.

ஆனால், அரசு அதை ஒப்புக்கொள்ள மறுக்கிறது. மாறாக அந்த நாடுகளுடன் மோதல் போக்கையே கடைபிடித்து வருகிறது. உதாரணமாக வங்கதேசத்தில் மக்கள் எழுச்சியால் ஏற்பட்ட அசாதரண சூழலின் போது, அங்கு பிரதமராக இருந்த ஷேக்ஹசீனாவுக்கு இந்தியாவில் தஞ்சம் அளித்தது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இதேபோல், இலங்கையுடனும் உறவு சீராக இல்லை. ஒவ்வொரு நாட்டின் நட்புறவுக்கும் ஒரு சிக்கலை உருவாக்கி வைத்துள்ளது இந்தியா. சிக்கலை ஒப்புக்கொண்டால் மட்டுமே, அதை சீர்செய்வதற்கான எண்ணம் வரும்.

ஆனால் இந்த அரசு, எந்தச் சிக்கலையும் ஒப்புக்கொள்ளாது. இது இந்தியாவுக்கு மட்டுமன்றி, அந்தந்த நாடுகளில் வாழும் இந்தியர்களுக்கும் சிக்கலை ஏற்படுத்தும். அண்டை நாடுகளில் பல்வேறு இந்தியர்கள், வியாபாரம் போன்ற காரணங்களுக்காக வசித்து வருகின்றனர். இத்தகைய அணுகுமுறை சீனாவுக்கே சாதகமாக அமையும். இந்த வகையில், இந்தியா தனது நட்பு நாடுகளை மெல்ல, மெல்ல இழந்து வருகிறது என்பதே யதார்த்தம் என்கின்றனர் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.

The post வெளியுறவு சிக்கல் appeared first on Dinakaran.

Read Entire Article