இடைப்பாடி: சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே வேம்பனேரி புதுப்பாளையம் அய்யனாரப்பன் கோயிலில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, பூஜைகள், இரவில் சுவாமி திருவீதி நடந்து வருகிறது. முக்கிய நிகழ்வாக நேற்று காலை குதிரை வாகனத்தில் தங்க கிரீடம் அணிவித்து சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அய்யனாரப்பன் சுவாமியை சப்பரத்தில் பக்தர்கள் தூக்கி சென்றனர். வேம்பனேரி, புதுப்பாளையம், கருப்பன் தெரு, சின்ன முத்தையம்பட்டி, பெரிய முத்தையம்பட்டி, சடச்சிபாளையம், மணிக்காரன் வரவு, சின்ன புதுப்பாளையம் ஆகிய பகுதிகள் வழியாக சுவாமி ஊர்வலம் நடந்தது.
வழியில் பக்தர்கள் தேங்காய், பழம் உடைத்து வழிபட்டனர். மேலும் விரதம் இருந்து 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பாவை விளக்கு எடுத்து வந்தனர். 7 ஊர்கள் வழியாக 10 கிலோ மீட்டர் தூரம் சுவாமி சப்பர ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து கோயிலை ஊர்வலம் வந்தடைந்தும் பொங்கல் வைத்து வழிபட்டனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி கொங்கணாபுரம், இடைப்பாடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
The post இடைப்பாடி அருகே அய்யனாரப்பன் கோயில் திருவிழா; 10 கிலோ மீட்டர் தூரம் சுவாமி சப்பர ஊர்வலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.