வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு நாட்டுப்புற கலைகளை பயிற்றுவிக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

3 weeks ago 4

சென்னை: வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு நாட்டுப்புற கலைகளை பயிற்றுவிக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்ற அயலக தமிழர் தினம் – 2025 விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இதில் கணியன் பூங்குன்றனார் விருதுகளை சிங்கப்பூர் நாட்டில் வசிக்கும் ரஜாராம் ராமசுப்பன் (கல்வி பிரிவு), ஜப்பான் நாட்டில் வசிக்கும் கமலக்கண்ணன் சண்முகம் (சமூக மேம்பாடு பிரிவு), ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும்  தேவி சிவானந்தம் (மகளிர் பிரிவு) மற்றும் லட்சுமணன் சோமசுந்தரம் (வணிகப்பிரிவு), தென்கொரியா நாட்டில் வசிக்கும் ஆரோக்கிய ராஜ் ( அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்), சிங்கப்பூரில் வசிக்கும் மருத்துவர் கங்காதர சுந்தர் (மருத்துவ பிரிவு), இலங்கையில் வசிக்கும் கிருஷ்ணகாந்தன் சந்தீப் (சிறந்த பண்பாட்டு தூதுவர் – வேர்களை தேடி) ஆகியோருக்கு தமிழ் மாமணி விருதினை அமெரிக்காவில் வசிக்கும் விஜய் ஜானகிராமன் ஆகியோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார். இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்தான் நம்மை இணைக்கும் தொப்புள் கொடி. அந்த உணர்வோடு உறவோடு தாய் மண்ணாம் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும் உங்கள் எல்லோரையும், உங்களில் ஒருவனாக வரவேற்கிறேன். இந்த இனிய நிகழ்ச்சியில், உங்களுக்கான புதிய திட்டத்தின் அறிவிப்பையும் வெளியிட விரும்புகிறேன். பல்வேறு நாடுகளில் இருந்து நம் தமிழ் மொழி, நாட்டுபுற கலைகள், தமிழ் பண்ணிசைகளை அயலகத்தில் வசிக்கும் தமிழ் மக்களின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு நேரடியாக பயிற்றுவிக்கவேண்டும் என்று கோரிக்கைகள் வந்த வண்ணம் இருக்கிறது.

அந்தவகையில், 100 ஆசிரியர்கள் மற்றும் தமிழ் கலைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து, இவர்களை அயலக தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு தேவைக்கேற்ப அனுப்ப, ஒரு திட்டம் உருவாக்கப்படும். இந்த பயிற்றுநர்கள், அந்த பகுதியிலிருக்கும் தமிழ் சங்கங்களுடன் இணைந்து, தமிழ் மொழியையும், தமிழ் கலைகளையும் 2 ஆண்டுகளுக்கு நேரடி பயிற்சி வகுப்புகள் மூலமாக நடத்துவார்கள். இதற்கு ஆகும் செலவையும் தமிழ்நாடு அரசே ஏற்கும். இதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்படும். நீங்கள் எங்கு இருந்தாலும், தமிழ்நாட்டில் உங்கள் சகோதரன் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முதல்வராக இருக்கிறேன் என்ற நம்பிக்கையோடு வாழுங்கள். அனைவருக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா வாழ்த்துகளை தெரிவித்து, வாழ்வதும்; வளர்வதும் – தமிழாகவும் தமிழினமாகவும் இருக்கட்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த விழாவில் அமைச்சர்கள் பொன்முடி, தா.மோ.அன்பரசன், ராஜகண்ணப்பன், ராஜேந்திரன், நாசர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் – சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை, இலங்கை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், நியூ பப்புவா கினியா ஆளுநர் சசீந்தரன் முத்துவேல், மலேசிய எம்.பி., தத்தோ  சரவணன், ரீ-யூனியன் தீவின் மேயர் ஜோ பெடியர், டர்பன் முன்னாள் அமைச்சர் ரவி பிள்ளை உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தோர், அயலக தமிழர் நலவாரிய தலைவர் கார்த்திகேயன் சிவசேனாதிபதி மற்றும் வாரியத்தின் உறுப்பினர்கள், தலைமைசெயலர் முருகானந்தம், பொதுத்துறை செயலர் ரீட்டா ஹரீஷ் தக்கர், அயலக தமிழர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

The post வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு நாட்டுப்புற கலைகளை பயிற்றுவிக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article