வெற்றியின் ஆரம்பப்புள்ளி துணிச்சல்

3 months ago 14

அச்சம் என்பது மனிதனை நாளும் கொல்லும்.அது இறப்பை விட பயங்கரமானது. இறப்பு கூட ஒரு மனிதனை ஒரு முறை தான் கொல்லும். பல சமயங்களில் அது வருவது கூட தெரியாமல் கொன்று விடும். கணநேர வேதனைதான். ஆனால் அச்சப்படுதல் என்பது ஒருவனை அணு அணுவாகச் சித்திரவதை செய்து கொல்லும். அந்த அச்சத்தை விட்டு நீங்கள் வெகுதொலைவில் ஓடினாலும், அது உங்களை துரத்திக் கொண்டே வரும். ஆனால் துணிந்தவனுக்கு வெற்றி வெகு தூரத்தில் இல்லை.நெப்போலியன் தனது படை வீரர்களை நோக்கிச் சொல்வான், ஆல்ப்ஸ் மலையின் அந்தப் பக்கம் இருக்கிறது வெற்றி. நாம் ஆல்ப்ஸ் மலையைக் கடந்து விட்டால் இத்தாலி நம்முடையது என்று, சாகத் துணிந்தவனுக்குச் சமுத்திரம் முழங்கால் மட்டும் என்றொரு சொல் உண்டு. வாழத் துணிந்தவனுக்கும் அது பொருந்தும். காலங்காலமாய் பிரமிப்பூட்டிக் கொண்டிருந்த ஆல்ப்ஸ் ஒன்றுமே இல்லை என்றானது நெப்போலியனின் அச்சமில்லா வீரத்தால்.

ஜார்ஜ் ஸ்டீபன்சன் துணிவு வேறு மாதிரி. சுரங்கத் தொழிலாளிகளுக்காகப் பாதுகாப்பு விளக்கைக் கண்டுபிடித்தார் அவர். அதை சோதித்துப் பார்ப்பதற்காக ஆபத்தான சுரங்கப் பாதையில் தாமே சென்று திரும்பினார் அவர். அவருடன் ஒரு குழுவும் சென்றிருந்தது.ஆனால் பாதி வழியில் வாயு பரவிருப்பதைக் கண்டு குழு அப்படியே பின்வாங்கியது.மரணத்தின் தாடை எலும்புகளை அசைத்தபடி தொடர்ந்து முன்னோக்கிச் சென்றார் ஸ்டீபன்சன். அவருடைய இதயம் அச்சத்தில் நடுங்கவில்லை,அவரது கைகளில் சிறிதளவு நடுக்கமும் இல்லை. வெடிக்கும் தன்மை உடைய வாயுவுடன் தனது விளக்கு ஒளியைப் பாய்ச்சினார் அவர். விளக்கின் ஒளி அதிகரிக்கவும், குறையவும் செய்ததேயன்றி, வெடிப்பு நிகழ்ந்து விடவில்லை. தீப்பற்றிக் கொள்ளக்கூடிய சுரங்கத்தில், பாதுகாப்பு விளக்கை முதல் முதலாய் ஒளிபடச் செய்தார் அந்த விஞ்ஞானி. இன்றைய உலகிலும் இது போன்ற சாதனையாளர்கள் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள். இதற்கு உதாரணமாய் இந்த சாதனை மங்கையை சொல்லலாம்.

சமீபத்தில் நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக்ஸில் பல சாதனைகள் நிகழ்ந்தாலும், அதேசமயம் பல நெகிழ்ச்சியான தருணங்களும் நடந்து உள்ளது. எகிப்தைச் சேர்ந்த வாள் வீச்சு வீராங்கனையான நடா ஹபீஸ் என்பவர் 7 மாத குழந்தையைக் கருவில் சுமந்து கொண்டிருக்கும் கர்ப்பிணியாக ஒலிப்பிக்கில் பங்கேற்றுள்ளார். இதுகுறித்து நெகிழ்ச்சியாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் அவர், மூன்று முறை ஒலிம்பிக்கில் பங்கேற்று விளையாடியிருக்கிறேன். ஆனால், இது என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒலிம்பிக்ஸ்.இந்த ஒலிம்பிக்ஸ் களத்தில் நானும், என் எதிரணி வீரர் மட்டும் விளையாடவில்லை.மூன்றாவதாக ஒரு சிறிய ஒலிம்பிக் வீரரும் என்னுடன் இருந்தார். ஆம், இந்த உலகத்தைக் காணக் காத்திருக்கும் என் குழந்தையும் என்னுடன் களத்தில் இருந்தார் என்பதாகக் குறிப்பிட்டு இருந்தார்.நானும் என் குழந்தையும் சேர்ந்து களத்தில் வாள் வீசினோம். இதற்காக இருவரும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நிறைய சவால்களை எதிர்கொண்டோம். கர்ப்ப காலம் என்பது கடினமானதுதான். ஆனால் குடும்பத்தையும், கனவையும் ஒருசேர சுமப்பது அதைவிடவும் கடினமானது.

சாதிப்பதற்கு இதுபோன்ற சவால்களை எதிர்கொள்ளத்தான் வேண்டும். அது சுகமான வலிதான். இந்தச் சூழலிலும் நான் ஒலிம்பிக்கில் பங்கேற்க எனக்கு உறுதுணையாக இருந்தார் என் கணவர். என் குடும்பமும் எனக்கு உறுதுணையாக நின்றது. அந்த வகையில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று நினைக்கிறேன் என்பதாக நடா ஹபீஸ் பதிவிட்டிருக்கிறார்.நடா ஹபீஸின் பதிவுக்கு உலகம் முழுவதிலுமுள்ள நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 26 வயதாகும் நடா ஹபீஸ் ஒரு ஜிம்னாஸ்டிக் வீரரும்கூட. வாள்வீச்சு, ஜிம்னாஸ்டிக் என விளையாட்டுகளில் கவனம் செலுத்தினாலும், அடிப்படையில் அவர் ஒரு மருத்துவராக திகழ்ந்துவருகிறார்.எகிப்து தேசத்தின் வாள் வீச்சு வீராங்கனையான நடா ஹபீஸ், 2015ம் ஆண்டு எகிப்திய பெண்கள் சேபர் தேசிய குடியரசு போட்டியில் களமிறங்கி வென்றவர். அல்ஜீரியாவில் நடந்த ஆப்பிரிக்க மண்டலப் போட்டியின் மூலம் 2016 ரியோ ஒலிம்பிக்கிற்குத் தகுதி பெற்றார்.அதையடுத்து 2018 ஆப்பிரிக்க மண்டல சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் மற்றும் 2014 மற்றும் 2019 இல் வெண்கலப் பதக்கங்களை வென்றார். பெல்ஜியம் டூர்னோய் சாட்டிலைட் போட்டியில் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸில் 7 மாத குழந்தையை கருவில் சுமந்தபடி களத்தில் வாள்வீசிய நடா ஹபீஸ் அமெரிக்கரான எலிசபெத் டார்டகோவ்ஸ்கியை 15-13 என்ற கணக்கில் தோற்கடித்து முன்னேறினார்.ஆனால், தென் கொரிய வீரர் ஜியோன் ஹா-யங்கிடம் 15-7 என்ற கணக்கில் தோல்வியுற்றார்.

உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவாகக் கருதப்படுவது ஒலிம்பிக் போட்டி. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தப் போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வெல்வதுதான் விளையாட்டு வீரர்களின் மிகப்பெரிய கனவுகளில் ஒன்று. அத்தகைய மதிப்புமிக்க விளையாட்டுப் போட்டியில் கர்ப்பிணியாகக் கலந்து கொண்ட நடா ஹபீஸ்.உலகத் தரவரிசையில் 7வது இடத்தில் இருக்கும் அமெரிக்க சாம்பியனுக்கு எதிராக வெற்றி பெற்றதன்மூலம், ஒரு எகிப்திய தடகள வீரர், மருத்துவர் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு பெண் எதையும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார்.பயத்தை மட்டுமே கற்பனை செய்து வாழ்பவர்களுக்கு, நீங்கள் துணிச்சலையும் கற்பனை செய்து பாருங்கள்.அப்போது இந்த உலகில் வெல்லக்கூடிய சக்தி உங்களிடம் இருக்கிறது என்று நீங்கள் உணர்வீர்கள் என்பதைத் தான் நடா ஹபீஸ் அவர்களின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது.

The post வெற்றியின் ஆரம்பப்புள்ளி துணிச்சல் appeared first on Dinakaran.

Read Entire Article