கோத்தகிரி : கோத்தகிரியில் உள்ள கொடநாடு காட்சி முனைக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளின் வசதிக்கேற்ப சுற்றுலா துறை மூலமாக காட்சி முனை புதுப்பொலிவு பெறச்செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் மிக முக்கிய பங்கு வகிப்பது கொடநாடு காட்சி முனை ஆகும். கொடநாடு காட்சி முனை கோத்தகிரியில் இருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் வனத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.
நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைத்து சுற்றுலா தலங்களையும் கண்டு களித்துவிட்டு சமவெளி பகுதிகளுக்கு செல்லும்போது கோத்தகிரி வழியாக கொடநாடு காட்சி முனைக்கு சென்று அங்குள்ள தமிழ்நாடு, கர்நாடக இருமாநில எல்லைகளில் உள்ள இயற்கை அழகை கண்டு ரசித்து செல்வர்.
காட்சி முனையில் சுற்றுலா பயணிகளின் வசதிக்கேற்ப தொலைநோக்கி மையம், காட்சி முனையில் பாதுகாப்பு வளையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தெங்குமரஹாடா கிராமம் அமைந்துள்ள காட்சி, பவானிசாகர் அணையின் காட்சி, ராக் பில்லர் ஆகியவற்றை காண அதிக அளவு சுற்றுலா பயணிகள் உள்ளூர் மற்றும் வெளி மாநில, மாவட்ட சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்கின்றனர்.
ஆண்டு தோறும் கோடை காலங்களில் மட்டுமே கலைக்கட்டும் கொடநாடு காட்சி முனையானது தற்போது வார விடுமுறை உட்பட நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து இப்பகுதியில் நிலவும் இயற்கை சூழலில் உள்ள கால நிலையை அனுபவிக்க படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
ஆனால் வார விடுமுறை நாட்கள் மட்டுமல்லாமல் வாரத்திற்கு இங்கு சுற்றுலா பயணிகள் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகின்றனர். இங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் இரண்டு சக்கரம், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் சுற்றுலா வாகனங்களில் வருகின்றனர்.
அதற்கேற்ப தொலைநோக்கி இல்லத்தில் உள்ள தொலைநோக்கி கருவி அதிகப்படுத்த வேண்டும். வாகன நிறுத்துமிடம் மிகக் குறைந்த பரப்பளவு மட்டுமே உள்ளது. மேலும் இங்கு வாகனங்கள் நிறுத்தம் செய்யும் இடத்தில் தினந்தோறும் கோத்தகிரியில் இருந்து கொடநாடு வரும் அரசு பேருந்துகள் திரும்பும் இடமாகவும் உள்ளது.
சில சமயங்களில் அதிக சுற்றுலா பயணிகள் வந்து வாகனங்கள் நிறுத்த போதிய இடம் இல்லாத சூழலில் சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் நிலை ஏற்பட்டு வருகிறது.
இதனால் கொடநாடு காட்சி முனைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி காட்சி முனைக்கு வரும் சுற்றுலா வாகனங்கள் நிறுத்த தற்போது உள்ள வாகன நிறுத்துமிடம் விரிவுபடுத்தவும், காட்சி முனைக்கு முன்பு உள்ள சாலையோரத்தில் இருபுறமும் உள்ள இடத்தை சீர்செய்து வாகனங்கள் நிறுத்தும் இடம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் வேண்டும் என சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மேலும் கோடைகாலம் தொடங்கும் முன் அதிக சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படும் சூழலில் காட்சி முனை பகுதியில் வாகன நிறுத்துமிடம் விரிவுபடுத்தப்பட்டு போக்குவரத்து பாதிப்புகளை சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காட்சி முனை பகுதிகளில் தொலைநோக்கி கருவி அமைக்க வேண்டும். அமர்ந்து செல்ல நாற்காலிகள் அமைக்க வேண்டும். பள்ளத்தாக்கு பகுதிகளை பார்வையிடும் இடத்தில் தற்போதுள்ள பாதுகாப்பு வளையங்களை சீர்செய்ய வேண்டும் என்பதே சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
The post சுற்றுலா பயணிகளின் வசதிக்கேற்ப கொடநாடு காட்சி முனை புதுப்பொலிவு பெறுமா? appeared first on Dinakaran.