வெற்றிப்பாதக்கு திருப்பப்போவது யார்..? டெல்லி - கொல்கத்தா அணிகள் இன்று மோதல்

2 weeks ago 7

புதுடெல்லி,

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் இன்றிரவு (செவ்வாய்க்கிழமை) டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறும் 48-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

அக்ஷர் பட்டேல் தலைமையிலான டெல்லி அணி 9 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி (2 முறை லக்னோ, ஐதராபாத், சென்னை, பெங்களூரு, ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக), 3 தோல்வியுடன் (மும்பை, குஜராத், பெங்களூரு அணிகளிடம்) 12 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் இருக்கிறது.

முந்தைய ஆட்டத்தில் டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் வீழ்ந்தது. அந்த ஆட்டத்தில் டெல்லி அணியின் பேட்ஸ்மேன்கள் சரியான பார்ட்னர்ஷிப் அளிக்காததும், வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் (51 ரன்) ரன்னை வாரி வழங்கியதும் பாதகத்தை ஏற்படுத்தியது.

டெல்லி அணியில் பேட்டிங்கில் லோகேஷ் ராகுல் (364) அபிஷேக் போரெல், டிரிஸ்டான் ஸ்டப்ஸ் நல்ல நிலையில் உள்ளனர். கருண் நாயர், அஷூதோஷ் ஷர்மா கணிசமான பங்களிப்பை அளித்தால் மேலும் வலுப்பெறும். பந்து வீச்சில் குல்தீப் யாதவ், மிட்செல் ஸ்டார்க், முகேஷ் குமார், விப்ராஜ் நிகம் நம்பிக்கை அளிக்கின்றனர்.

கொல்கத்தா அணி இந்த சீசனில் சீரற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி தடுமாறி வருகிறது. அந்த அணி 9 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை (பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டம்) என 7 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது. கடைசி 2 ஆட்டங்களில் பஞ்சாப், குஜராத் அணிகளிடம் அடுத்தடுத்து பணிந்த கொல்கத்தா அணி, பஞ்சாப்புடன் இரண்டாவது முறையாக மோதிய ஆட்டம் மழை காரணமாக பாதியில் ரத்தானது.

இதில் 202 ரன் இலக்கை நோக்கி ஆடிய அந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி ஒரு ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 7 ரன் எடுத்திருந்த நிலையில் மழை பலமாக கொட்டியதால் ஆட்டம் அத்துடன் கைவிடப்பட்டது.

உள்ளூர் ரசிகர்களுக்கு மத்தியில் 7-வது வெற்றியை குறிவைத்து டெல்லி அணி களம் காண்கிறது. சரிவில் இருந்து மீண்டு வெற்றிப்பாதைக்கு திரும்புவதுடன், அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க இனி வரும் எல்லா ஆட்டங்களும் முக்கியம் என்பதால் கொல்கத்தா அணியும் தீவிரம் காட்டும் என்று தெரிகிறது.

இவ்விரு அணிகளும் இதுவரை 33 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் கொல்கத்தா 18 ஆட்டங்களிலும், டெல்லி 15 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்:-

டெல்லி: பாப் டு பிளிஸ்சிஸ், அபிஷேக் போரெல், கருண் நாயர், லோகேஷ் ராகுல், அக்ஷர் பட்டேல் (கேப்டன்), டிரிஸ்டான் ஸ்டப்ஸ், விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், துஷ்மந்தா சமீரா, குல்தீப் யாதவ், முகேஷ் குமார், அஷூதோஷ் ஷர்மா அல்லது மொகித் ஷர்மா.

கொல்கத்தா: ரமனுல்லா குர்பாஸ், சுனில் நரின், அஜிங்யா ரஹானே (கேப்டன்), அங்கிரிஷ் ரகுவன்ஷி, வெங்கடேஷ் அய்யர், ரிங்கு சிங், ரோமன் பவெல், ஆந்த்ரே ரஸ்செல், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி, சேத்தன் சகாரியா.

Read Entire Article