நன்றி குங்குமம் டாக்டர்
வெந்நீர் குடிப்பதால் செரிமானம் மேம்படும், மலச்சிக்கல் நீங்கும், உடலில் இருந்து நச்சுக்கள் வெளியேறும், சரும ஆரோக்கியம் மேம்படும், மேலும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
கடும் காய்ச்சல் உள்ள நிலையில் ஒருவருக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டால், வெந்நீரைச் சிறிது சிறிதாகப் பருகக் கொடுப்பது நம் முன்னோர் வழக்கத்திலிருந்தது. ஆனால், அந்தக் காய்ச்சல், வாதம் மற்றும் கபதோஷங்களால் ஏற்பட்டிருந்தால் மட்டுமே இந்த ஏற்பாடு. ஆயுர்வேதத்தில் பித்த தோஷத்தினால் ஏற்படும் காய்ச்சலில் ஷடங்கபானீயம் எனும் மூலிகைத் தண்ணீரைப் பருகத் தருவார்கள்.
மந்தமான காய்ச்சல், பசியின்மை, மூட்டுகளில் வலி, தலைவலி, மூக்கிலிருந்து நீராக ஒழுகுதல், மூச்சிரைப்பு, இருமல், மலச்சிக்கல், சிறுநீர்த் தடை, குளிர்நடுக்கம், மந்தமான தன்மை, பார்வை மங்குதல், தலைச்சுற்றல், அலுப்பு ஆகியவை வாத, கப காய்ச்சலில் ஏற்படும் அறிகுறிகளாகும். இதில் பல அறிகுறிகள் கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளாக தென்படுவதையும் காணலாம். அதனால் இந்தத் தொற்று தொண்டையிலுள்ளபோது, வெந்நீரைப் பருகுவதால் அந்த வைரஸுக்கு ஒரு ஸ்ட்ரக்சரல் டேமேஜ் உருவாக்குகிறதோ என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது. இந்நிலையில், வெந்நீரைப் பருகுவதால், அது செய்யும் அற்புதச் செயல்களை ஆயுர்வேதம் கீழ்க்காணும் வகையில் கூறுகிறது.
செரிமானம் மேம்படும்: வெந்நீர் செரிமான அமைப்பை தூண்டி, உணவு செரிமானம் எளிதாக நடைபெற உதவுகிறது.
மலச்சிக்கல் நீங்கும்: வெந்நீர் குடல் இயக்கத்தை ஊக்குவித்து, மலச்சிக்கல் பிரச்னையை சரிசெய்யும்.
உடல் நச்சுக்களை நீக்கும்: வெந்நீர் உடலின் நச்சுக்களை வெளியேற்றி, சுத்தப்படுத்த உதவுகிறது.
சரும ஆரோக்கியம்: வெந்நீர் குடிப்பதால் சருமம் பளபளப்பாக இருக்கும், மேலும் சரும பிரச்சனைகள் நீங்கும்.
ரத்த ஓட்டம் அதிகரிக்கும்: வெந்நீர் ரத்த ஓட்டத்தை சீராக்கி, உடல் முழுவதும் ரத்தத்தை சீராக பாய உதவும்.
தொண்டையிலுள்ள கபத்தை நீர்க்கச் செய்கிறது. அதனால் அதன் வெளியேற்றமானது எளிதாகிறது. நீர்வேட்கை இதன் மூலம் குறைகிறது. வயிற்றிலுள்ள பசித்தீயைத் தூண்டிவிடுகிறது.
உடல் உட்புறக் குழாய்களை மிருதுவாக்கி, அதன் உட்புறங்களில் படிந்துள்ள அழுக்குகளான பித்தம், வாயு, வியர்வை, மலம், சிறுநீர் ஆகியவற்றை அதனதன் பாதைகளுக்குத் திருப்பி, குழாய்களைச் சுத்தப்படுத்துகிறது.
அதிக உறக்கம், மந்தத்தன்மை, நாக்கில் ருசியின்மை போன்ற உபாதைகளைத் தீர்த்துவிடுகிறது. மேற்குறிப்பிட்ட காரணங்களால், உயிரை உடலில் தங்கச் செய்து காப்பாற்றுகிறது என்கிறார் வாக்படர் எனும் முனிவர், தான் இயற்றிய அஷ்டாங்கஹிருதயம் எனும் ஆயுர்வேத நூலில். இதற்கு நேர்மாறாக, குளிர்ந்த நீரைப் பருகினால், வாத- கப தோஷங்களை ஒன்றிணைத்து உடல் உபாதைகளை மேலும் வலிமையாக்குகிறது.
இந்தத் தண்ணீரையே ஒருசில மூலிகைகளைக் கொண்டு காய்ச்சி அதையே வெந்நீராகப் பருகினால், மேலும் அது பல நன்மைகளைத் தரக்கூடும். கோரைக்கிழங்கு பத்து கிராம், ஐந்து கிராம் சுக்கு ஆகியவற்றைப் பெருந்தூளாக இடித்து, ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி, ஐநூறு மில்லி லிட்டராக வற்றியதும் வடிகட்டி, ஒருநாளில் பல தடவை சிறிது சிறிதாகப் பருகினால், வாத- கப சுரத்தில் ஏற்படும் பல உபாதைகளையும் நீக்கக் கூடிய சிறந்த குடிநீராகப் பயன்படும்.
தண்ணீரை அரைப் பங்கு மீதமாகுமளவில் சுண்ட வைத்துக் காய்ச்சிச் சாப்பிடுவது பித்த நோய்களுக்கு நல்லது. கோடையிலும் (சித்திரை – வைகாசி) காற்றடிக்கும் காலத்திலும் (ஆனி – ஆடி) இப்படிப் பாதி அளவு குறுக்கிய நீரைப் பருகுவது நல்லது.
கால்பங்கு மீதமாகுமளவில் குறுக்கிய நீர் முக்கியமாகக் கப நோய்களுக்கும், எல்லா நோய்களுக்கும் நல்லது. தொண்டையிலும் மார்பிலும் கபக்கட்டு, உணவு செரிமானமாகாமல் வயிறு கனத்திருத்தல், இருமல், காய்ச்சல் முதலிய நிலைகளில், இந்த வெந்நீர் கபத்தை இளக்கி வெளியேற்றும். சிறுநீரை அதிக அளவில் பிரி்க்கும். உடல் லேசாகும். உணவு நன்கு செரிக்கும். காய்ச்சலின் தாபம் குறையும். இருமல் வேகம் அடங்கும்.
ஆறிய வெந்நீரை மறுபடியும் காய்ச்சக் கூடாது. சுக்கு வெள்ளம் என்பது கேரளத்தில் மிகவும் பிரசித்தம். மலையாளிகள் எங்கு வசித்தாலும் அவர்கள் வீட்டில் இந்த சுக்கு வெள்ளம் சூடாகக் கிடைக்கும். சுக்கு, தேங்காய் கொட்டாங்கச்சி, வறுத்த கொள்ளு, கருங்காலிக்கட்டை, சீரகம், கொத்துமல்லிவிதை முதலியவற்றை ருசிக்கு ஏற்ப சேர்த்து தண்ணீரில் போட்டுக் காய்ச்சிக் குடிக்கின்றனர். உடலில் காணும் தடிப்பும், சினப்பும், எளிதில் செரிமானமாகாத தன்மையும் விஷத்தன்மையும் நீங்க, இது மிகவும் பயன்படுகிறது.
பொதுவாகவே விலாப்பிடிப்பு, விலாவலி, சளி, வாதரோகம், தொண்டைக்கட்டு, வயிற்று உப்புசம், குடல் நிமிர்ந்திருத்தல், விக்கல், நெய், எண்ணெய் முதலியவை ஜீரணமாகாமல் ஏற்படும் காணாக்கடி போன்ற தடிப்பு, அஜீரணத்துடன் கூடிய காய்ச்சல் ஆகியவற்றுக்கு வெந்நீர் அருந்துவது மிகவும் நல்லது.
தொகுப்பு: தவநிதி
The post வெந்நீரின் நன்மைகள்! appeared first on Dinakaran.