வெண்புள்ளிக்கு என்ன தீர்வு?

5 hours ago 2

நன்றி குங்குமம் டாக்டர்

விட்டிலிகோ என்று அழைக்கப்படும் வெண்புள்ளி என்பது சருமம் சார்ந்த ஒரு நோய். தேசிய சுகாதார நிறுவனங்களின் (NIH) கூற்றுப்படி, இந்தியாவில் வெண்புள்ளி பாதிப்பு 0.25% முதல் 4% வரை உள்ளது. குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இந்த பாதிப்பு 8.8 சதவீதம் வரை செல்கிறது.

வெண்புள்ளி காரணமாக சிலர் உடல்ரீதியாக பாதிக்கப்படுவதோடு மன ரீதியாகவும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சமூகத்தில் புறக்கணிப்புகளைச் சந்திக்கும் அவர்கள் இதன் காரணமாக தாழ்வு மனநிலைக்குச் செல்கின்றனர்.வெண்புள்ளி என்றால் என்ன, அது ஏன் ஏற்படுகிறது, எப்படி சிகிச்சை அளிப்பது என்பதை இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.

வெண்புள்ளி என்றால் என்ன? அது எப்படி ஏற்படுகிறது?

நமது உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியின் ஒரு பகுதி, உடலுக்கு எதிராக செயல்படுவதால் வெண்புள்ளி ஏற்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் வெண்புள்ளி ஏற்படலாம். மெலனோசைட்டுகள் என்று அழைக்கப்படும் நிறமி உற்பத்தி செய்யும் செல்கள் இதில் அழிக்கப்படுகின்றன. மெலனோசைட்டுகள் நமது சருமத்துக்கு பழுப்பு நிறத்தை அளிக்கும் மெலனின் என்பதை உற்பத்தி செய்கின்றன. இந்த செல்களின் இழப்பு வெள்ளைத் திட்டுகளை ஏற்படுத்தி நிற இழப்புக்கு வழிவகுக்கின்றன.

ஒருவருக்கு வெண்புள்ளி ஏற்படுவதற்கான சரியான காரணம் இதுவரை அறியப்படவில்லை என்று குறிப்பிடும் தினேஷ், அதேநேரத்தில் காரணம் தொடர்பாக மூன்று கோட்பாடுகள் உள்ளன. நரம்புகளின் செயலிழப்பால் சீர்கேடான நரம்பு சப்ளை ஏற்படுவதைத் தொடர்ந்து மெலனோ

சைட்டுகள் சேதமடையலாம் மெலனோசைட்டுகள் தனக்குத் தானே அழிவை ஏற்படுத்திக்கொள்ளும் என்று சில ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.சில நேரங்களில் உடல் அதனுடைய சொந்த திசுவை அந்நிய பொருள் என்று நினைத்து அழிக்கிறது. இது தன்னுடல் தாங்குதிறன் (Auto immune) எதிர்வினை என்று அழைக்கப்படுகிறது. மெலனோசைட் சேதமடைவதற்கு இதுவும் காரணமாக இருக்கலாம்.

சிலருக்கு பரம்பரையாக மரபணு சார்ந்து வெண்புள்ளி ஏற்படலாம். தைராய்டு, சர்க்கரை நோய், வைட்டமின் பி 12 குறைபாட்டால் ஏற்படக்கூடிய ரத்த சோகையின் தீவிர நிலை போன்ற நோய்களோடு சேர்ந்தும் வரலாம். வெண்புள்ளி துரிதமாக அதிகரிப்பதற்குச் சில நேரங்களில் மன அழுத்தமும் காரணமாக இருக்கிறது.

வெண்புள்ளியின் வகைகள்

உடலில் பல்வேறு பாகங்களிலும் வெண்புள்ளி ஏற்படலாம். அது தோன்றும் பாகத்தைப் பொறுத்து வெவ்வேறு வகையாக அவை அழைக்கப்படுகின்றன.

உதடு- முனை வெண்புள்ளி (Lip-tip vitiligo)- உதடு, கை-கால் விரல்களில் ஏற்படும்.

பிரிவுகளாக ஏற்படும் வெண்புள்ளி (Segmental vitiligo)- உடலின் ஒரு பகுதியில் மட்டும் ஏற்படும்.

பொதுவான வெண்புள்ளி (Generalized vitiligo) சருமம் முழுவதும் மெலனோசைட்களால் பாதிக்கப்பட்டு, முழுமையாக வெள்ளையாகிவிடும்.

இதேபோல் உதட்டின் உள்பகுதி, பிறப்புறுப்பின் உள்பகுதி போன்ற இடங்களில் ஏற்படும் வெண்புள்ளி மியுகோசல் வெண்புள்ளி (Mucosal vitiligo) என்று அழைக்கப்படுகிறது.

வெண்புள்ளிக்கான சிகிச்சைகள் என்ன?

வாய்வழிவாக அளிக்கப்படும் மருந்துகள் மற்றும் உடலில் பூசும் களிம்புகள்(Creams) மூலம் சிகிச்சை அளிக்கப்படுவது ஒரு வகை. இது நோய் பரவுவதை நிறுத்தி பெரும்பாலான பகுதிகளில் நிறமியை மீண்டும் பெற உதவுகிறது. அடுத்ததாக UV தெரப்பி. இதில், பாதிக்கப்பட்ட பகுதியில் புற ஊதா ஒளி செலுத்தப்பட்டு அதன் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மூன்றாவதாக இருப்பது அறுவைசிகிச்சை. உடலில் வெண்புள்ளி பாதிப்பில்லாத பகுதியில் இருந்து தோலை எடுத்து நிறமில்லாத இடத்தில் அறுவைசிகிச்சை மூலம் மாற்றுவது.இது ஸ்கின் க்ராஃப்டிங்’ (Skin Grafting) என்று அழைக்கப்படுகிறது.

எனினும், வெண்புள்ளி பரவல் நிலைத்தன்மையை அடைந்த பிறகுதான் இந்த சிகிச்சையை மேற்கொள்ள முடியும்.வெண்புள்ளி என்பது ஆட்டோ இம்யூன் நோய். எனவே, இதை முழுவதுமாக குணப்படுத்த முடியாது. சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் வெண்புள்ளி ஏற்படலாம். சிகிச்சையால் அது தீவிரமடைவதைத் தாமதப்படுத்த முடியும், மேலும் பரவுவதைத் தடுக்க முடியும் அவ்வளவுதான்.

எனவே, சிகிச்சையை நிறுத்திய பிறகு நோய் மீண்டும் ஏற்படலாம். வெண்புள்ளி தொடர்பாக ஆரம்பக் கட்டத்திலேயே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவதன் மூலம் திறம்பட சிகிச்சை அளிக்க முடியும்.முறையான சிகிச்சைகள், தொடர் கவனிப்பு ஆகியவை மூலம் நிறமியை முழுமையாக பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.

வெண்புள்ளி தொற்றுநோயா?

வெண்புள்ளி தொற்றுநோய் என்ற எண்ணம் பலரிடமும் இருக்கிறது. ஆனால், நிச்சயமாக வெண்புள்ளி தொற்றுநோய் இல்லை. ஒரு சிலர் திருமணம் செய்துகொள்வதற்கு முன்புகூட மருத்துவர்களிடம் சென்று கேட்பார்கள். சொல்லப்போனால், மணமகனுக்கோ மணமகளுக்கோ கூட வெண்புள்ளி இருக்காது. அவர்களின் தாத்தாவுக்கோ அல்லது பாட்டிக்கோ இருந்திருக்கலாம்.

திருமணம் செய்துகொள்வதால், தங்களுக்கும் வெண்புள்ளி பாதிப்பு ஏற்படுமா என்று கேட்பார்கள். ஆனால், ஒருவரைத் தொடுவதன் மூலம் வெண்புள்ளி பரவாது. நிறைய பேர் வெண்புள்ளியை தொழுநோய் (leprosy) என்று தவறாக நினைத்துக் கொள்கின்றனர். வெண்புள்ளி என்பது தொற்றுநோய் அல்ல என்பதால் வெண்புள்ளியால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்குவதை நாம் தவிர்க்க வேண்டும். இது தொடர்பாக போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

The post வெண்புள்ளிக்கு என்ன தீர்வு? appeared first on Dinakaran.

Read Entire Article