
சென்னை,
'சென்னை 28, பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி, சரோஜா, கோவா, மாநாடு, மங்காத்தா, கோட்' உள்ளிட்ட பல படங்களை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். அஜித், விஜய் இருவரையும் இயக்கியதைப் போலவே இருவரின் படங்களில் நடித்தும் இருக்கிறார் வெங்கட் பிரபு. சமுத்திரக்கனி இயக்கிய `உன்னைச் சரணடைந்தேன்' படத்தில் வெங்கட் பிரபு கதாநாயகனாக நடித்துள்ளார். பயணங்கள் முடிவதில்லை, ஏப்ரல் மாதத்தில் உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர பாத்திரங்களில் நடித்துள்ளார்.
ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படம் வெளியாகி இரண்டு வாரம் கடந்துள்ள நிலையில் நேற்று படத்தின் வெற்றி விழாவை படக்குழு சென்னையில் கொண்டாடி வருகிறார்கள். வேட்டையன் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் ரஜினி நடித்து வருகிறார். அடுத்த ஆண்டு தீபாவளிக்கு இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூலி படத்திற்கு பின் அடுத்த படத்திற்காக சில இயக்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
நடிகர் ரஜினிகாந்த் - இயக்குநர் மணிரத்னம் கூட்டணி இணைய உள்ளதாகவும் படத்தின் அறிவிப்பு ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12 ம் தேதி வெளியாகும் என தகவல் வெளியானது.
இந்த நிலையில், கோட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு நடிகர் ரஜினியைச் சந்தித்து கதை கூறியுள்ளதாகவும் இந்த கூட்டணி இணையவுள்ளதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது. விஜயின் கோட் படத்தை பார்த்த ரஜினிகாந்த் வெங்கட் பிரபுவுக்கு போன் செய்து பேசி பாராட்டினார். கோட் படத்திற்கு பின் வெங்கட் பிரபு சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கவிருப்பதாக தெரிவித்திருந்தார்.