* பாதுகாப்பு பணியில் 300 போலீசார்
* சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தேனி : தேனி அருகே வீரபாண்டியில் உள்ள கவுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா இன்று அதிகாலை முதல் கோலாகலமாக துவங்கிறது. இந்நிலையில் நேற்று இரவில் இருந்தே ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து நேர்த்திக்கடன் செலுத்தத் துவங்கினர்.
தேனி அருகே வீரபாண்டியில் உள்ள கவுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஆண்டு தோறும் சித்திரை மாதம் இறுதி வாரம் எட்டு நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். இவ்விழாவில் தேனி மாவட்ட மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 10 லட்சம் பக்தர்கள் வரை விழாவில் கலந்து கொள்வர்.
அம்மனை வேண்டி பிரார்த்தனை செய்தவர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதைத் தொடர்ந்து நன்றிக்கடன் செலுத்தும் வகையில் அக்னிசட்டி எடுத்தல், ஆயிரம்கண்பானை எடுத்தல், மாவிளக்கு ஏற்றுதல், அங்கபிரதட்சனம் செய்தல், அலகு குத்துதல் என பல்வேறு வகையான நேர்த்திக் கடன்களை செலுத்துவர். நேர்த்திக்கடன் செலுத்த வரும் பக்தர்கள் தங்களது குடும்பத்தினருடன் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கோயிலுக்கு வருவது வழக்கம்.
இதன்காரணமாக திருவிழா நடக்கும் எட்டு நாட்களும் பகல், இரவு என 24 மணி நேரமும் தேனியில் இருந்து வீரபாண்டி செல்லும் சாலையில் உப்புக்கோட்டை பிரிவு தொடங்கி உப்பார்பட்டி பிரிவு வரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம் நிரம்பி இருக்கும். திருவிழாவையொட்டி மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தின் அனைத்து நகரங்களில் இருந்தும் சிறப்புபேருந்துகளை அரசு போக்குவரத்துக்கழகம் மூலம் இயக்கப்படும்.
கோயிலுக்கு வரும் பக்தர்கள்அம்மனை வழிபட்ட பிறகு பொழுதுபோக்கும் வகையில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கோயில் வளாகத்தில், ராட்டினங்கள் அமைக்க ஏற்பாடு செய்யும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா இன்று (6ம்தேதி) முதல் வருகிற 13ம் தேதி வரை நடக்க உள்ளது.
இதனையடுத்து, நேற்று இரவு முதலே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதனால் நள்ளிரவு முதலாக கோயில் பகுதியில் கட்டுக்கடங்காத கூட்டம் நிரம்பியிருந்தது. 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
வருகிற 9ம் தேதி சித்திரைத் திருவிழாவையொட்டி இக்கோயிலில் தேரோட்டம் நடக்க உள்ளது. இதனையடுத்து அன்றைய தினம் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு சார் நிறுவனங்கள், கல்வித் துறை சார்ந்த நிறுவனங்களுக்கு தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் உள்ளூர் விடுமுறை விடுத்து உத்தரவிட்டுள்ளார்.
அடிப்படை வசதிகள்:
இன்று அதிகாலை முதல் திருவிழா தொடங்குவதையடுத்து , வீரபாண்டி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தேனியில் இருந்து வீரபாண்டி செல்லும் சாலையில் பை-பாஸ் அருகே ஒரு தற்காலிக பேருந்து நிலையமும், வீரபாண்டி கோயிலில் இருந்து கம்பம் செல்லும் சாலையில் பை-பாஸ் பிரிவு அருகே மற்றொரு தற்காலிக பேருந்து நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது.
இப்பேருந்து நிலையங்களில் நடமாடும் கழிப்பறைகள், தற்காலிக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கோயில் வளாகத்தில் ஆறு இடங்களில் நிரந்தர கழிப்பறைகள் உள்ள நிலையில், பை&பாஸ் பிரிவு மற்றும் பேரூராட்சி அலுவலகம் அருகே ஒரு இடம் என இரு இடங்களில் தற்காலிக கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் கோயில் திருவிழா நடக்கும் பகுதியில் 12 இடங்களில் தற்காலிக ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கோயில் வளாகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளும் வகையில் 450 தூய்மைப் பணியாளர்களை தினக்கூலி அடிப்படையில் நியமித்து சுழற்சி முறையில் பணிக்கு அமர்த்தியுள்ளது.
தேனி மாவட்ட போலீஸ் சார்பில் உயர்மட்டக் கோபுரங்கள் அமைத்து, கண்காணிப்பு கேமராக்கள் மூலமாகவும், போலீசார் மூலமாகவும் திருட்டு போன்ற சம்பவங்கள் நடப்பதை கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
The post வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் நேர்த்திக் கடன் செலுத்த குவியும் பக்தர்கள் appeared first on Dinakaran.