திருவண்ணாமலையில் கியூஆர் கோடு இல்லாத ஆட்டோக்கள் பறிமுதல்

5 hours ago 2

*வட்டார போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை

திருவண்ணாமலை : திருவண்ணாமலை பிரசித்தி பெற்ற ஆன்மிக நகரமாகும். தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள், வெளி நாடுகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இங்கு வருகின்றனர். எனவே, 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கும் நகரமாக திருவண்ணாமலை மாறிவிட்டது. அதனால், திருவண்ணாமலையில் ஆயிரக்கணக்கான ஆட்டோக்கள் இயங்குகின்றன.

அதில், உரிய ஆவணங்கள் இல்லாத ஆட்டோக்களும் இயக்கப்படுவதாக புகார் எழுந்தது. எனவே, ஆட்டோக்களை முறைப்படுத்தவும், அனுமதியில்லாத ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

அதையொட்டி, திருவண்ணாமலை நகரில் இயக்க வட்டார போக்குவரத்துத்துறையால் அனுமதிக்கப்பட்ட ஆட்டோக்களை அடையாளம் காணவும், ஆட்டோக்களின் விபரங்களை பயணிகள் அறிந்து கொள்ள வசதியாகவும் கியூஆர் கோடு வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதையொட்டி, வட்டார போக்குவரத்து அலுவலகமும், போக்குவரத்து காவல் பிரிவும் இணைந்து, ஆட்டோக்களின் பதிவு விபரம், இன்சூரன்ஸ், உரிமையாளரின் விபரம் போன்றவற்றை ஆய்வு செய்து, அனுமதி வழங்கினர். அவ்வாறு அனுமதி பெற்ற ஆட்டோக்களுக்கு மட்டும் கியூஆர் கோடு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருவண்ணாமலையில் இயக்கப்படும் 2160 ஆட்டோக்களில், முழுமையான விபரங்கள் சரிபார்க்கப்பட்டு முதற்கட்டமாக 1750 ஆட்டோக்களுக்கு கியூஆர் கோடு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலையில் இயக்க அனுமதிக்கப்படும். கியூஆர் கோடு பெறாத ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, திருவண்ணாமலையில் நேற்று வட்டார போக்குவரத்து அலுவலர் கருணாநிதி, மோட்டார் வாகன ஆய்வாளர் பெரியசாமி உள்ளிட்ட வட்டார போக்குவரத்துத்துறையினர் நேற்று திடீர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, கியூஆர் கோடு இல்லாத 20க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், சம்மந்தப்பட்ட ஆட்டோக்களின் ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு, கியூஆர் கோடு வழங்கப்பட்டது. உரிய ஆவணங்கள் இல்லாத ஆட்டோக்கள், வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டுசெல்லப்பட்டன.

The post திருவண்ணாமலையில் கியூஆர் கோடு இல்லாத ஆட்டோக்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article